இலங்கையர்களிற்கு சுகபோகம் வேண்டாம்
இலங்கைக்குள் கிட்டத்தட்ட 600 அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் இறக்குமதியை ஊக்கப்படுத்தவும் நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலைத் தொகுத்துள்ளன.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இவற்றை தடை செய்வதற்குப் பதிலாக மூன்று நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்படி, குறிப்பிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வுள்ளதுடன் மேலும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதங்கள் அதிகரிக்கப் படும். மேலும், நாட்டுக்கு இறக்குமதி செய்யும் மீதமுள்ள பொருட்களைக் கட்டுப்படுத்த ஏனைய மாற்று வழிகள் பின்பற்றப்படும்.
இந்தப் புதிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சு விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி. லக்ஷ்மனின் தலையீட்டைத் தொடர்ந்து, முன்னர் அத்தியாவசியமற்றதாக அறிவிக்கப்பட்ட 623 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போதைய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப் பட்டதன் மூலம் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.