November 22, 2024

சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

உலகில் மிகப் பெரிய தனியார் வங்கியான சுவிஸர்லாந்தின் Credit Suisse வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புயை வாடிக்கையாளர்கள் பலரது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்திரவதை, போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, ஊழல் மற்றும் ஏனைய கடுமையான குற்றங்களில் தொடர்புள்ள வாடிக்கையாளர்களின் மறைமுகமான செல்வத்தை Credit Suisse வங்கி கசிய விட்டுள்ளது.

இதனடிப்படையில், 100 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமான பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் வெளியாகும் The Guardian பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதன் மதிப்பு இலங்கை ரூபாயின் பெறுமதியில் 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல் வெளியீட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள சித்திரவதைகளுக்கு உட்படுத்தும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும், பண சுத்திகரிப்பில் ஈடுபடும் மற்றும் ஏனைய பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய 30 ஆயிரம் பேர், சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகில் உள்ள 120 நாடுகளை சேர்ந்த நபர்கள் சுவிஸர்லாந்தின் இந்த வங்கியில் வைப்புச் செய்துள்ளனர்.

இவர்களில் பிலிப்பைன்ஸின் மனித கடத்தல்காரர், லஞ்சம் வாங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஹொங்காங் பங்குச் சந்தை வர்த்தகர், லெபனான் பொப் நட்சத்திரம் காதலியைக் கொலை செய்ய உத்தரவிட்ட கோடீஸ்வரர் மற்றும் வெனிசுலாவின் அரச எண்ணெய் நிறுவனத்தை கொள்ளையிட்ட நிர்வாகிகள் மற்றும் எகிப்து முதல் உக்ரைன் வரை ஊழல் அரசியல்வாதிகள் ஆகியோர் அடங்குகின்றனர்.

தகவல்களில் இலங்கையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள உலக வரைப்படத்தில் இலங்கையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளமை முக்கியமானது.

எனினும் இலங்கையை சேர்ந்த நபர்களாது பெயர் விபரங்களை பிரித்தானிய பத்திரிகை வெளியிடவில்லை.

இவ்வாறு தகவல் வெளியிடப்பட்டுள்ள சில வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1940 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கிறது. எனினும் வெளியிடப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்கில் மூன்றில் இரண்டு வங்கிக் கணக்குகள் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert