சுமந்திரனின் கையெழுத்துப் போராட்டம்!! சஜித் , விக்கி ஆதரவு!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக சுமந்திரனினால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டை போராட்டம் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த மதத் தலைவர்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பங்களை மேற்கொண்டு வரும் நிலையிலேயே மேற்படி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
தொலைபேசி ஊடாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, சஜித் பிரேமதாச தனது தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திரூபவ் பயங்கரவாதத் தாடைச்சட்டத்தினை நீக்கும் கையெழுத்து வேட்டைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை அளிப்பதோடு அதுபற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பினை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி குறித்த கையெழுத்து வேட்டையில் தான் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன், பயங்கரவாத தடைச்சட்டத்தனை முழுமையாக நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுமந்திரன் முன்னெடுத்து வரும் போராட்டத்தினை பாராட்டியதோடு அதில் தானும் பங்கேற்பதற்கு தயாராக உள்ளதாகவும் கையொப்பமிடுவதற்கு எங்கு வருகை தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்
அதன்போது, சுமந்திரன், நீங்கள் எங்கும் வருகை தர வேண்டிய அவசியமில்லை. அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வு இருப்பதால் அங்கு வைத்து நீங்கள் கையொப்பமிடமுடியும் என்று பதிலளித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் குறித்த கையொப்பமிடும் ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுமந்திரன் தற்போது வரையில் ஏறக்குறைய அனைத்து தரப்பினரும் சதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.
தொழிற்சங்கங்கள் பலவும் இந்த கையொப்பமிடும் விடயத்தில் இணைந்து கொள்வதற்கு ஆவலாக உள்ளதாகதெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அச்சங்கங்கள் தமக்கு தெளிவூட்டல் நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்யுமாறும் கோரியுள்ளார்.
தென்னிலங்கையைச் சேர்ந்த சர்வமதகுருமார்கள் பலர் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்வதற்கு தாமாகவே முன்வந்து தொடர்பு கொண்டுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கையெழுத்து வேட்டையில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுத்தபோதும் இதுவரையில் அத்தரப்பினர் எவ்விதமான பதிலளிப்புக்களையும் செய்யவில்லை என்றும் சுமந்திரன் கூறினார்.