நடுவீதியில் அமைச்சரும் சாரதிகளும்!
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களுள் ஒருவரது வாகனமும் டீசல் இல்லாமல் நடுவீதியில் நின்று போன பரிதாபம் நடந்துள்ளது.
“இன்று முழு நாடும் ஸ்தம்பித்துள்ளது. எங்கும் டீசல் இல்லை. நான் பதுளையிலிருந்து வரும்போது டீசல் இல்லை என்று சொன்னார்கள். கொழும்பில் இருந்து சரி கொண்டு வரச் சொன்னேன். அரசாங்கம் மட்டுமல்ல, முழு நாடும் இன்று ஸ்தம்பித்துள்ளது.
இன்று முழு நாட்டு மக்களும் ஸ்தம்பித்துள்ள துடன் கடுமையான கொள்கையைக் கடைப் பிடித்து வருகிறோம். அரசாங்கம் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை” என தொழில் அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா தெரிவித்தார்.
இதனிடையே மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தாங்கிக்கொள்ள முடியாத விடயமாக காணப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தால் டீசல் சலுகைளை வழங்கவேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேருந்து கட்டணங்களை மீண்டும் அதிகரிப்பதற்கு பேருந்து உரிமையாளர்கள் தயாராகயில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்து உரிமையாளர்களின் வருமானம் பெருமளவிற்கு எரிபொருட்களிற்கு செலவிடப்படுவதால் பேருந்து உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என சங்கத்தின் உதவி செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
பொதுப்போக்குவரத்து சேவையில் உள்ளவர்களிற்கு அரசாங்கம் எரிபொருள் விலைச்சலுகையை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகள் அதிகரித்தால் பேருந்து சேவையில் ஈடுபடமுடியாத நிலையேற்படும் என கெமுனுவிஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்களின் கரிசனைக்குரிய விடயம் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து சாரதிகள் பதற்றமடையவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.