சாணக்கியன் பொய் என்கிறது இலங்கை காவல்துறை!
இலங்கை தமிழரசுகட்சியை சேர்ந்த ஒருவரை வெள்ளை வானில் கடத்த முயற்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் தகவல் உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
விசாரணைகளின்போது வெள்ளை வானில் பயணித்துக்கொண்டிருந்த இன்னுமொரு குழுவினருடனான மோதலின் பின்னரே அருள் நிசாந்தன் என்பவரே பொலிஸில் வெள்ளை வான் கடத்தல் என முறைப்பாடு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவ்வேளை வெள்ளை வானில் பயணித்துக்கொண்டிருந்த இருவரும் வர்த்தகர்கள் அவர்கள் எந்த வகையிலும் அரச புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் நிசாந்தன் கடத்தப்படவுமில்லை என குறிப்பிட்டுள்ளது.
ஆகவே குறிப்பிட்ட பெயரில் வெளியான டுவிட்டர் பதிவு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் பிழையாக வழிநடத்துவதை நோக்கமாக கொண்டவை இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.