ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெர்மனியின் மத்திய மாகாணமான பவேரியாவில் உள்ள முனிச் நகரில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் மற்றொரு பயணிகள் ரெயில் வந்தது.
அப்போது 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.