ஐரோப்பாவில் தேடுதல் நடவடிக்கை! 45 பேரைக் கைது செய்தது யூரோபோல்!!
ஐரோப்பாவில் போதைப் பொருள் வலைமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 45 பேரைக் ஐரோப்பிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பியத் துறைமுகங்கள், சரக்கு விமானங்கள், தனியார் ஜெட் விமானங்கள், கப்பல் கொள்கலன்களைப் பயன்படுத்தி கொக்கெய்ன் போதைப்பொருளைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் அல்பேனிய மொழி பேசும் போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பில் இக்குழுவும் ஒன்று என்று யூரோப்போல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
600 க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், சட்டவாளர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்தில் இந்த வலையமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக சோதனைகளை நடத்தியிருந்தனர்.
பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் துறைமுக நகரைச் சுற்றி 49 தேடல்கள் உட்பட ஐரோப்பா முழுவதும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடந்தன.
பெல்ஜிய ஃபெடரல் வட்டவாளர் அலுவலகம் 30 பேர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
தேடுதலில் ஒரு பெரிய அளவிலான அசிட்டோன், பல கிலோ கணக்கான கஞ்சா மற்றும் போலி காவல்துறை சீருடைகள் பெல்ஜியத்தில் கைப்பற்றப்பட்டன.
பெல்ஜியம், குரோஷியா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் உட்பட ஏழு நாடுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கப்பல் கொள்கலன்கள் ஆண்ட்வெர்ப்பை அடைகின்றன. பெல்ஜியம் ஐரோப்பாவிற்குள் போதைப்பொருள் கடத்தும் ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.
இக்குழு போதைப்பொருள் விற்பனையில் வரும் இலாபங்களை பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை அமைத்து பணத்தை வெள்ளையாக்குகின்றது என யூரோப்போல் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.