உக்ரைனின் பிரிவினை கோரும் பகுதிகளை சுந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்யாவில் வாக்களிப்பு!
உக்ரைனின் கிழக்குப் பிரதேசமான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இடங்களை சுதந்திரநாடாக அங்கீகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கோரும் தீர்மானங்களுக்கு ரஷ்ய சட்டமியற்றுபவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வாக்களிக்கவுள்ளனர்.
டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (டிபிஆர்) மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு (எல்பிஆர்) ஆகியவற்றை சுதந்திரமாக அங்கீகரிக்கும் நோக்கத்துடன் இரண்டு தீர்மானங்கள் வாக்கெடுப்பில் சமர்ப்பிக்கப்படும் என்று ரஷ்யா நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்
இரண்டு தீர்மானங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதில் முதலாவது தீர்மானம் இரண்டு பிரதேசங்களையும் உடனடியாக அக்கீகரிக்குமாறு புட்டினிடம் நேரடியாக முறையிடும். இரண்டாவது தீர்மானம் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அரசாங்க அமைப்புகளுக்கு ஆய்வு மற்றும் கருத்துக்காக அனுப்பப்படும்.
வாக்களிப்பில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று வோலோடின் கூறினார்.
உக்ரைனில் உள்ள குறித்த இரண்டு பிரதேசங்களிலும் பிரிவினைவாதிகள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ரஷ்யா முழு ஆதரவையும் வழங்கி வருகிறது. குறித்த பிரிவினைவாத அமைப்புக்கள் 2014 ஆண்டு முதல் உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வருகின்றன.