அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை விரட்டியடித்தது ரஷ்யா!!
பசுபிக் பகுதியில் உள்ள ரஷ்ய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பலை ரஷ்ய கடற்படையினர் விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா தனது பசிபிக் கடற்படையுடன் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை அதிகாலை குரில் தீவுகளுக்கு அருகில் நீர்மூழ்கிக் கப்பல் காணப்பட்டது.
அதை உடனடியாக வெளியேற ரஷ்ய கடற்படையால் உத்தரவிடப்பட்டது என்றும் இந்த உத்தரவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் புறக்கணித்ததால் ரஷ்ய போர் கப்பல்கள் அந்த நீர் மூழ்கிக்கப்பலை விரட்டியடித்துள்ளது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்ய பிராந்திய கடற்பரப்பில் அதிகபட்ச வேகத்தில் வெளியேறியது என்று பாதுகாப்பு அமைச்சகம் மேற்கோளிட்டுள்ளது
மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உக்ரைன் அருகே ரஷ்ய இராணுவக் கட்டமைப்பைப் பற்றி அதிக பதட்டங்கள் நிலவும் நேரத்தில், வாஷிங்டன் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியது.
மார்ஷல் ஷபோஷ்னிகோவ் போர்க்கப்பலின் குழுவினர், நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்ய கடற்பரப்பில் இருந்து வெளியேறச் செய்வதற்கு „தொடர்பான வழிமுறைகளை பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மேற்கோள் காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புப் படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய கடல் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை எதனையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை எனக் கூறி இச்செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது.
அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கப்டன் கைல் ரெய்ன்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில்:
எங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களின் துல்லியமான இருப்பிடம் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ரஷ்யா அவர்களின் பிராந்தியக் கடற்பரப்பில் நாங்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.
ஆனால் நாங்கள் பறக்கிறோம், பயணம் செய்கிறோம். சர்வதேச கடல்களில் பாதுகாப்பாக செயல்படுகிறோம் என்றார்.
மற்ற நாடுகள் தங்கள் கடல் எல்லைக்குள் நுழையாமல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா கண்காணிப்பது வழக்கம் என்ற அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.