இலங்கை கறுப்புபட்டியலில்:எச்சரிக்கை!
இலங்கையில் தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான பேண்தகு தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்- நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன உட்பட பலர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன் அரசாங்கம் மிகக்கடும் சவாலை எதிர்கொண்டுள்ளதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தற்போதைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு கூட்டு திட்டமொன்றிற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் தேசிய பொருளாதார கொள்கைக்கு மிகவும் சிறந்த பொருளாதார கொள்கை அவசியம் இது தற்போதைய நிலைமைக்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணஉதவும்,நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான பேண்தகு தீர்வொன்றை உறுதி செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல்தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் இறையாண்மை கடனை செலுத்துவதை ஒத்திவைப்பதற்கும் கடனை செலுத்துவது குறித்த மீள் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பலபடிமுறையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்ற யோசனையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
செலுத்தவேண்டிய கடனை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையானது பொருளாதார நெருக்கடியை தணிக்கும்,பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களின் நெருக்கடிகளை குறைப்பதற்கும் அதிகாரிகளிற்கும் உதவியாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கடன்சந்தையில் இலங்கை கறுப்புபட்டியலில் சேர்க்கப்படும் அளவிற்கு தரப்படுத்தலில் நாடு வீழ்ச்சியடைந்துள்ளது,பயன்படுத்தக்கூடிய டொலர் கையிருப்பு ஒருமாத இறக்குமதிக்கும் போதியதாக இல்லாத நிலை காணப்படுகின்றது, என எதிர்கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.