3வருடத்தின் பின்னர் பிணையாம்!
கிளைமோர் குண்டுகளைத் தம் வசம் வைத்திருந்தார்கள் என குற்றஞ்சாட்டி சந்தேகத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு, வவுனியா நீதிமன்றம், நேற்று (07) மூன்று வருடங்களின் பின்னர் பிணை வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதியன்று, 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் 9ஆவது சந்தேகநபர் கைது செய்யப்படாத நிலையில், திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏனைய எண்மர் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபையிடம் விடயம் விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் பலனாக சட்டமா அதிபரால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மதக் கடிதம், நீதிமன்றத்துக்கு அனுப்பட்டிருந்ததையடுத்து 8 பேரும், பதில் நீதிபதி க.தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்தே கைதுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது,