கிளிநொச்சி வைத்தியர் பிரியந்தினியை மிரட்டிய அரசியல்வாதி கைதானார்
கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதேவேளை, பாடசாலை மாணவர்களை குறிவைத்த மாபியாக்களின் தகவலை வெளிக்கொணர்ந்த வைத்தியர் பிரியந்தினிக்கு மிரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு 26.01.2022 அன்று உள்ளூர் அரசியல்வாதி கோபாலகிருஷ்ணன் என்பவரால் தொலைபேசி மூலம் பல தடவைகள் அழைப்பு எடுத்து அச்சுறுத்தல் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகம் என்பவை மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது தங்குமிடத்துக்கு அச்சுறுத்தல் நோக்கத்துடன் வாகனங்களில் இனந் தெரியாத நபர்கள் சென்று வன்செயல் புரிந்தமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கம் அவர்கள் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் பெப்ரவரி முதலாம் திகதிக்குள் இது தொடர்பான விசாரணைகளை பூர்த்தி செய்து உரிய குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்திருந்த நிலையில் 29. 01. 2022 அன்று பொலிஸார் பிரதான குற்றவாளியை கைது செய்ததாக தெரிவித்தனர்.
வைத்தியர் பிரியந்தினிக்கு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட உள்ளூர் அரசியல்வாதி கோபாலகிருஷ்ணன் நீதிமன்றில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவரை மறு உத்தரவு வரும் வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.