இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஜனாதிபதி. மு- பா- உ- ஜி. ஸ்ரீநேசன் மட்டக்களப்பு.
இனவாத செயற்பாடுகள் இலங்கையில் தலை விரித்தாடுகின்றன,
இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஜனாதிபதி.
ஜி. ஸ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு.
ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையின்போது தனது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். இக்கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால் அவரது ஆட்சியில் இனவாத செயற்பாடுகள் பேச்சுகள் தலைவிரித்தாடுவதை அவர் கண்டு கொள்ளாதுதான் ஆச்சரியமாகவுள்ளது. அதுவும் ஆசியாவின் ஆச்சரியமாகத் தான்படுகிறது.
தமிழ் மொழி,சிங்கள மொழிகளில் ஏற்கனவே பாடப்பட்ட தேசியகீதம் இப்போது சிங்கள மொழியில் மட்டும் பாடப்படுகிறது.விசேடமான நிகழ்வுகளில் இதனைப் பார்க்க முடிகிறது.அதேவேளை ஏற்கனவே காணப்பட்ட இந்துக்கலாசார,இஸ்மிய விவகார,கிறிஸ்தவ விவகார அமைச்சுகள் இல்லாமல் செய்யப்பட்டு பௌத்தசாசன அமைச்சு மாத்திரம் பிரதமரிடம் உள்ளது. மேலும், தொல்லியல் ஆணைக்குழுவில் சிங்கள பெளத்தர்கள் மாத்திரம் இடம் பெற்றுள்ளனர்.
அடிப்படைச் சிங்கள பெளத்த வாதத்தைக் கொப்பளித்துவரும் ஞானசாரதேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சாதாரண சிறிய விடயங்களுக்குக்கூட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள்,பல வருடங்களாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை மரண தண்டனை,ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சிக்களச்சிறைக்கைதிகள் பலர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் மூலமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ருவான்வெலிசாயவில் பதவியேற்ற ஜனாதிபதி தான்,சிங்கள பெளத்தர்களால் தெரிவு செய்யப்பட்டதாகப் பல தடவைகள் கூறியுள்ளார்.ஆனால் அவரது வெற்றியைத் தீர்மானித்த தமிழ், முஸ்லிம் வாக்குகள் சுமார் ஏழு இலட்சங்கள் பற்றி அமர் பேசுவதில்லை. அந்த ஏழு இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித்திற்கு அளிக்கபப்பட்டிருந்தால் அவர் வென்றிருப்பார் என்பதை ஜனாதிபதி கருத்திற் கொள்வதில்லை. தொல்லியல் இடங்கள் என்ற போர்வையில் தமிழர்கள், முஸ்லிம்களின் கலாசாரப்பூமிகள் தொல்லியல் ஆணைக்குழுவால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் மேய்ச்சல் தரைகள்,காணிகள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.தமிழர்களின் பிரச்சினை சோறும் தண்ணியும்தான் என்று அமைச்சர் மகிந்தானந்த கூறியுள்ளார்.காணாமல் ஆக்கப்பட்டவர்களை மண்ணைத் தோண்டிப் பார்க்குமாறு அமைச்சர் விமல்வீரவன்ச கூறியுள்ளார். தமிழர்களின் பிரச்சினை அபிவிருத்தி மட்டுமே என்று ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் கூறுகின்றார்கள். கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தமிழ்பேசும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.திரைமறைவில் சிங்கள பெளத்தக் குடியரசு ஒன்றினை அமைப்பதற்கான அரசியல் யாப்பு வரையப்பட்டு வருவதாகச் சந்தேகம் எழுப்பப்படுகிறது. இப்படியாக இந்த அரசாங்கம் சிங்கள பெளத்த அடிப்படைவாதத்தினை மூலதனமாக,முதலீடுகளாகக்ன கொண்டு செயற்படுகின்றது. இப்படியெல்லாம் யதார்த்தங்கள் இருக்க,தமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை என்று ஜனாதிபதி கூறுவது உள்நாட்டு மக்களை மட்டுமல்ல, உலகத்தையே ஏமாற்றும் செயலாக உள்ளது.
இன்னுமொருவகையில் நோக்கினால் சிங்கள பெளத்தர்கள் இனவாத மதவாகயதரீதியாகச் செயற்பட இடமுண்டு.தமிழர்கள்,முஸ்லிங்கள், இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் தமது இனத்துவம்,மதத்துவம் சார்ந்து செயற்பட முடியாது என்பதுதான் ஆட்சியாளர்களின் வியாக்கியானமாக அமைந்துள்ளது. அப்படியானால் பல்லிமைக்கள் ஒற்றையாட்சி முறையின் கீழ் சமத்துவமாக சமவுரிமைகளுடன் வாழ முடியாது என்பதுதான் 74 வருட கால சிங்கள பெளத்த அடிப்படைவாத வரலாறாகவுள்ளது.பல்லின மக்கள் சுயநிருணய உரிமையுடன் சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ் ஆளப்பட வேண்டியதுதான் இதற்கான ஒரே தீர்வாக உள்ளது. ஆயின் ஒற்றையாட்சிமுறை சமூக பொருளாதார அரசியல் கலாசார ரீதியாகப்பாரிய தோல்வியினை அடைந்துள்ளது எனபதுதான் வரலாற்று ஆய்வின் முடிந்த முடிவாகும்.ஆனால் ஆட்சியாளர்கள் இதனை கடைசிவரை உணரவே மாட்டார்கள்.சர்வதேசம் இங்கை ஆட்சியார்களுக்கு உணர்த் வேண்டிய காலம் கனிந்துள்ளது என்பதுதான் உண்மையாகும்.