மீன்பிடிஅமைச்சர் நெல் வெட்டுகிறார்!
கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படைகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் நெல் அறுவடை செய்கின்றார். இறால் வளர்ப்பு செய்கின்றார். அது தவறல்ல. ஆனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,எங்கள் மீனவர்களின் பிரச்சினை பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எங்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. மீனவர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இழுவை மடி தொழிலை தடுத்து நிறுத்தக்கோரியே போராட்டத்தை நடத்துகிறோம்.
மீன்பிடி சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு நடைமுறைக்கு கொண்டுவராமல் குப்பைக்குள் போட்டுவிட்டார்கள். எங்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சியோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ உதவி செய்ய தேவையில்லை. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தலாம் தானே?
இந்தியா எமக்கு என்ன செய்தது. ஆறு தமிழ் கட்சிகள் சேர்ந்து இந்தியா எமக்கு வேண்டும் இந்தியாவை பகைக்க முடியாது என்கின்றனர்.நாங்கள் படும் கேவலத்தை இந்தியாவிலும் நீங்கள் பேசலாம் தானே. மீனவர் பிரச்சினையையே தீர்க்கமுடியாத நீங்களா அரசியல் பிரச்சினையை தீர்க்கப் போகின்றீர்கள். நீங்கள் சுகமாக வாழ்வதற்கு இந்தியா உங்களுக்கு வேண்டும். ஆனால் மீனவர்கள் சுகமாக வாழ்வதற்கு நாங்கள் போராடுகிறோம்
காரைநகரில் இருந்து சுண்டிக்குளம் வரை அரை கிலோ மீற்றர் தூரத்தில் ரோலர் படகுகள் வந்து செல்கிறது. இது எமது அரசியல் வாதிகளுக்கு தெரியாதா. ஏன் இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. எங்கள் கடலுக்குள் வந்து எங்கள் வளத்தை அழிப்பதற்கு உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்தியா எமது போராட்டத்திற்கு என்ன செய்ததென்று தெரியாதா. இதை கவனத்தில் எடுக்காமல் இந்தியா வேண்டும் என்று கூறுகிறீர்கள். உங்களால் நிப்பாட்ட முடிந்தால் அதனை செய்யுங்கள். இல்லாவிட்டால் எங்கள் பிரச்சினைகள் பற்றி நீங்கள் வாய் திறக்கக் கூடாது. திறந்தால் இதைவிட கேவலமாக நாங்கள் பதில்கூறுவோம். சிலர் இலங்கை அரசாங்கத்திற்கு சலாம் போடு போடுகின்றனர்.சிலர் இந்திய அரசாங்கத்திற்கு சலாம் போடு போடுகின்றன
இந்திய படகுகளை இலங்கை பிடித்து ஏலம் விடுவதற்கு இன்று கத்திக் கொண்டிருப்பவர்கள்,நமது ஆயிரக்கணக்கான படகுகள் ஏலத்தில் விடப்பட்ட பொழுது எங்கு சென்றீர்கள். இதற்கு யார் பொறுப்பு.
நீங்கள் எங்கள் வரிப்பணத்தில் தின்று கொண்டு எங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றீர்கள்.
கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படைகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் நெல் அறுவடை செய்கின்றார். இறால் வளர்ப்பு செய்கின்றார். அது தவறல்ல. ஆனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றார்.