வடக்கில் நடைபெறுவது மக்களுக்கான நடமாடும் சேவையா? ஜெனிவாவுக்கான நாடகமாடும் தேவையா? ஜி.ஸ்ரீநேசன்
ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு.
இலங்கையில் அவ்வப்போது ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.இவற்றை ஆசியாவின் ஆச்சரியங்கள் என்றும் கூறலாம்.அந்தவகையில் இப்போதும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெறுகின்றது.அதாவது வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீதியமைச்சர் அலிசப்ரியின் தலைமையில் அமைச்சர் டக்ளசின் ஒத்துழைப்போடு வடக்கில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.இலங்கையின் மனிதவுரிமை தொடர்பான நிலைமை பற்றி ஆராயக்கூடிய ஜெனிவாக் கூட்டத் தொடர் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த நடமாடும் சேவை காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நடமாடும் சேவையா? அல்லது ஜெனிவாவுக்கான நாடகமாடும் தேவையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. நடமாடும் சேவை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவரது அலுவலகச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் அவர் பதிலளிக்கும் போது பின்வருமாறு விளக்களித்தார்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினை என்பது பாரிய மனிதவுரிமை மீறல்களுடன் தொடர்பான மனிதாபிமானத்துடன் கூடிய பிரச்சினையாகும். அப்பிரச்சினைகளுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய கடப்பாடு இப்போதைய அரசாங்கத்திற்குள்ளது.இறுதியுத்த காலத்தின்போது ஜனாதிபதியாக இருந்தவர் தற்போதைய பிரதம மந்திரியாகவுள்ளார்.அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ளார்.அவரது பெயரில் அந்த யுத்தத்தத்தைக் கையாண்டவர் என்றவகையில் ‘கோத்தாவின் யுத்தம்’என்ற புத்தகம் ஒன்றும் உயர் படையதிகாரி ஒருவரால் வெளியிடப்பட்டிருந்தது.எனவே 2005 -2009 காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பாகப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்திற்குத் தாராளமாக உள்ளது.அந்த வகையில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கடத்தியவர்கள் யார்? அவர்களை சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தவர்கள் யார்? அவர்களைக் கொண்றவர்கள் யார்? இவற்றுக்கான கட்டளைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்கியவர்கள் யார்? அந்த விடயங்களை மறைக்க வேண்டியதன் அவசியம் என்ன? உண்மைகள் கண்டறியப்படாதது ஏன்? குற்றவாளிகளைத் தண்டிக்காதது ஏன்? அவர்கள் யாரால் பாதுகாக்கப்படுகின்றார்கள்? அப்படியானவர்களை விடுவித்தவர்கள் யார்? குற்றவாளிகளுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதா? போன்ற பல கேள்விகள் உள்ளன.
இந்த நியாயமான கேள்விகளுக்கான நீதியான விடைகள் கிடைக்க வேண்டும்.அதனை விடுத்து அவை மூடி மறைக்கப்படுமாயின் நியாயமான சந்தேகங்கள் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டேயாகும். குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் அவர்கள் பாதுகாக்கப்படுகின்ற ஆட்சி முறையாக இருந்தால் இவ்வாட்சி முறையினை ஜனநாயகத்தின் பேரால் அழைக்க முடியாது.அவ்வாறு அழைத்தால் அதுவும் ஆசியாவின் ஆச்சரியமாகவே இருக்கும். நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் சிறுபான்மை இனத்தமிழ் பேசும் அமைச்சராவார். அவர் நீதியமைச்சர் மடடுமல்ல ஜனாதிபதி சட்டத்தரணியாகவும்,சிறுபான்மை இனத்தவராகவும் இருக்கின்றார். எனவே அவர் நீதிவிடயத்தில் கவனமாகச் செயற்பட வேண்டும். ஆகவே, அவர் அவரது தலைமையிலுள்ள நடமாடும் சேவையை காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் சேவையாக ஆற்ற வேண்டுமேயொழிய மாறாக ஜெனிவா மனிதவுரிமைப் பேரவைக்கு விடையளிப்பதற்குத் தேவையான நாடகமாடும் தேவையாக மாற்றியமைக்கக் கூடாது. வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களையும்,சிறுநஷ்ட ஈட்டையும் வழங்குகின்ற தேவையாக அந்த சேவை அமைந்து விடக்கூடாது. அதனைச் செய்ய முற்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழுறவுகள் ஏற்க மாட்டார்கள் என்பதே உண்மையாகும். அவர்கள் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து விட்டனர்.அவர்கள் சர்வதேச நீதிப்பொறிமுறையினையே நூறு வீதம் நம்பும்நிலை ஏற்பட்டு விட்டது என்பதே உண்மையாகும்.அந்தளவுக்கு யுத்தத்தின் பின்னர் 13 ஆண்டுகள் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது சர்வதேசம் அறிந்த உண்மையாகும்.