November 23, 2024

நீதி அமைச்சினை புறக்கணிக்க அழைப்பு!

நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வில் காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எவரும் கலந்து கொள்ளவேண்டாம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,நீதி அமைச்சு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களின் பங்குபற்றுதலுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை ஒன்று வடக்கில் இடம்பெறவுள்ளது.

அதன் முதலாவது நிகழ்வு நாளையதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.அதற்கு நீதி அமைச்சர் வருகை தரவுள்ளதாகவும் அறிகிறோம். நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் ஏன் என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எவரும் செல்லவேண்டாம் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம். எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள்.எமது உறவுகளை கொடுத்து 12 வருடங்கள் கடந்துவிட்டது. எமக்கான நீதி வழங்கப்படவில்லை. எத்தனையோ ஆணைக்குழுக்களை அமைத்து இவர்கள் எங்களை ஏமாற்றுகின்றார்கள்.

எமது போராட்டங்களும் 5 வருடங்களை கடக்கின்றது. எமது உறவுகளுக்கு மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் வழங்குவதே அவர்களது நோக்கம். இந்தப்பிச்சைக்காக நாம் போராடவில்லை. எமது உறவுகளை தேடியே நாம் போராடுகின்றோம்.

குற்றவாளிகளை தண்டிக்காமல் பொதுமன்னிப்பு வழங்கி காப்பாற்றும் இந்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை எப்போதே இழந்துவிட்டோம். இன்று சர்வதேசத்தை நம்பும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.எனவே இவ்வாறான நிகழ்வுகள் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி குழப்பும் ஒரு செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். எமது உறவுகள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும்.- என்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert