விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை
5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!
சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன் தமது முக்கியமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த நிலையில், 5ஜியின் பயமுறுத்தல் வந்திருக்கின்றது.
பயணிகளின் பாதுகாப்புக் கருதிச் சில விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சில பறப்புக்களை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தன. புதிதாக அறிமுகமான 5ஜி செல்போன் சேவைகளிற்கும் விமானங்களில் பாவிக்கும் முக்கியமான விமான தொழில்நுட்பத்திற்கும் இடையிலான தொழில்நுட்ப தொடர்புகளை காரணம் காட்டியே அமெரிக்காவிற்கான சில விமான சேவைகளை நிறுத்தப்பட்டன.
‘5ஜி என்றால் அது என்ன ஏலியனா அல்லது விமான எதிர்ப்புப் பீரங்கியா?’ என்று மெய்நிகர் ஊடாகக் கற்பித்தல் நிகழ்ச்சியில் 5 ஆம் வகுப்பில் கற்கும் ஒரு மாணவன் என்னிடம் கேட்டபோது, மாணவர்களின் சிந்தனை எங்கெல்லாம் பறக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன். ஏனென்றால் அவர்கள் ஏலியனைப்பற்றிய கதைகளை அறிந்திருக்கிறார்கள், ஆனால் 5ஜி பற்றித் தெரிந்திருக்கவில்லை. புதிய தொழில் நுட்பம் என்பதால் நானும் அதைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. ஸ்மாட்போனில் ஒரு தரவை விரைவாகப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஒரு தரவை விரைவாகப் பதிவேற்றம் செய்யவோ இது பயனுள்ளதாக அமையும் என்பதை, எனக்குத் தேவையானதை அறிந்திருந்தேன். அப்படித்தான் இங்கேயும் அறிமுகம் செய்திருந்தார்கள்.
ஜி என்ற ஆங்கில எழுத்து ‘ஜெனரேசன்’ என்பதைக் குறிக்கும். இதுவரை காலமும் 4ஜி தொழில்நுட்பம்தான் பாவனையில் இருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால் தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டம்தான் 5ஜி ஆகும். தொலைபேசித் தொடர்பாடலில் 5ஜி என்பது செல்போன்களின் தொடர்பாடலின் விரைவையும், அதன் புதிய செயற்பாட்டையும் குறிக்கும் ஐந்தாம் தலைமுறைத் தொழில்நுட்ப வசதியாகும். இப்போது இந்த நவீனவசதிகள் சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் இருந்து செல்போன் நிறுவனங்கள் 5ஜிக்கு ஏற்றமாதிரியே தங்கள் புதிய தொலைபேசிகளைத் தயாரிக்கின்றனர். எதிர்காலத்தில் 5ஜி தொழில் நுட்பம் உலகெங்கும் சுமார் 170 கோடி வாடிக்கையாளர்களால் பாவனைப்படுத்தப்படும்; என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
முதன் முதலாக வர்த்தக ரீதியாக காற்றலைகள் மூலம் வயர் தொடர்பில்லாமல் 1980களில் நடந்த செல்போன் சேவையைத்தான் ஜி1 என்று குறிப்பிட்டார்கள். மிகப் பெரியதொரு மாற்றத்தை தொலைத்தொடர்பில் இது ஏற்படுத்தி இருந்தது. முன்பு வயர்களால் தொடுக்கப்பட்ட தொலைபேசிகளே பாவனையில் இருந்தன. வீடுகளில், பணியிடத்தில், அல்லது அதற்காக அமைக்கப்பட்ட இடங்களில் இருந்துதான் தொலைபேசியில் கதைக்க முடியும். புதிய தொழில் நுட்ப வசதியால் எங்கும் கொண்டு செல்லக்கூடிய வகையில் இந்த செல்போன்கள் அமைந்திருந்தன. இதனால் விரைவான செய்திப் பரிமாற்றம் ஏற்பட்டது. அதன்பின் 1991 ஆம் ஆண்டு மேலும் பல வசதிகளோடு ஜி2 சேவை பின்லாந்து நாட்டில் அறிமுகமானதால் மேலும் சில வசதிகள் கிடைத்தன. 2001 ஆம் ஆண்டு ஜி3 சேவை அடுத்த கட்டமாக யப்பான் நாட்டில் அறிமுகமானது. வண்டிப் பயணத்தின்போது இடங்களை அறிந்து கொள்ளப் பாவிப்கும் ஜி.பி.எஸ் போன்ற வசதிகளை இது பெற்றுத்தந்தது.
2009 ஆண்டு ஜி4 சேவை தென்கொரியாவில் அறிமுகமானது. ஒரு நொடிக்கு நூறு மெகாபைட் வேகத்தில் இது செயற்பட்டது. அனேக நாடுகளில் இந்த ஜி4 சேவைதான் இப்போதும் பாவனையில் இருக்கின்றது. இதைத் தொடர்ந்து ஜி5 சேவை 2019 ஆண்டு அறிமுகமானாலும், இப்போது சில நாடுகளில் மட்டுமே அறிமுகமாகி இருக்கின்றது. இதற்கு மெமரிக்காட் தேவையில்லை. எங்கோ ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்வை உடனடியாக எங்கிருந்தும் தெளிவாகப் பார்க்க முடியும். இதன் மூலம் ஒரு திரைப்படத்தை முழுமையாகச் சில நொடிகளில் பதிவிறக்கம் செய்துவிட முடியும். திரையிடப் போகும் திரையரங்குகளுக்கு இதன் மூலம் விரைவாகத் திரைப்படங்களைத் தெளிவாகப் பதிவிறக்கம் செய்துவிட முடியும். பிலிம் பெட்டிகளைக் காவிக்கொண்டு திரியவேண்டிய அவசியமிருக்காது.
ஏன் அமெரிக்காவுக்கான சில விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தினார்கள் என்பதற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பலாம். விமான சேவைக்கும் இந்த 5ஜிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். இந்த ஜி5 சேவையைப் பரிமாறும் அன்ரனாக்கள் விமான நிலைத்தற்கு அருகே இருந்தால் அது ஆபத்தானது என்று இதற்கான நிபுணர்களால் சொல்லப்பட்டது. காரணம் விமானம் பறக்கும் உயரத்தைக் கணிப்பதற்கும், அவசரகாலங்களில் தரை இறங்குவதற்கும் இதுபோன்ற சக்தி வாய்ந்த சேவைதான் விமானிகளால் இப்போது பாவிக்கப்படுவதால், தவறான தகவல்களால் தரை இறங்கும் போது விபத்துக்கள் ஏற்படலாம் என விமான நிறுவனத்தினர் பயம் கொள்கிறார்கள். பொதுமக்களின் பாவனைக்கு இது வந்துவிட்டால், விடயம் தெரிந்த யாராவது தவறாக, அல்லது விஷமத்தனமாகக் கட்டளைகளைப் பிறப்பித்தல், நூற்றுக் கணக்கான விமானப் பயணிகளின் உயிர் இதில் தங்கி இருக்கின்றது. விமான ஓட்டுனரை நம்பி விமானத்தில் ஏறும் அப்பாவிப் பயணிகளைப் பலிக்கடாவாக்கக் கூடாதல்லவா?
அமெரிக்காவின் சில விமானநிலையங்களிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளதாக எமிரேட்ஸ் விமானசேவை நிறுவனத்தினர் முதலில் அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்புக் கருதி எயர்இந்தியா, எயர் நிப்போன், ஜப்பான் எயர்வேய்ஸ், லுப்ஹன்ஸா, பிரிட்டிஷ் எயவேய்ஸ் போன்ற சில விமானநிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள ஒன்பது விமான நிலையங்களுக்கான தங்கள் விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. எயர்பிரான்ஸ், கே.எல்.எம், வேஜின் அட்லான்டிக் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுகின்றன. டெல்டா எயலைன்சும் காலநிலையைப் பொறுத்து முடிவெடுக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. சுமார் 10 விமான நிறுவனங்களின் 1000 தினசரி சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டன. அல்டிமீட்டர்கள் பொருத்தப்பட்ட சில விமானங்களின் வகைகள், Airplane models with one of the five cleared altimeters include some Boeing 717, 737, 747, 757, 767, 777, MD-10/-11 and Airbus A300, A310, A319, A320, A330, A340, A350 and A380 models.
‘ரேடார் அல்டிமீட்டர்கள்’ என்று சொல்லப்படுகின்ற உபகரணங்கள் அனேகமான விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பறப்பின் உயரத்தையும், அவசரதேவையின் போது தரை இறங்குவதற்கும் இந்தக் கருவிகளே பாவிக்கப்படுகின்றன. அதிவேக 5ஜியின் அறிமுகத்தால் விமானத் தொழில்நுட்பத்திற்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதுதான் இப்போது உள்ள பிரச்சினை. வெள்ளம் வரமுன்பு அணை கட்டுவது நல்லது தானே என்ற முடிவோடுதான் சில விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்தனர். 5ஜியின் பாவனைக்காக இந்த விமான நிலையங்களுக்கு அருகே இருக்கும் அன்டனாக்களால் பாதிப்பு ஏற்படலாம் என விமான ஓட்டிகள் நம்புகின்றார்கள். எனவே அதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டு பிடிக்கும்வரை, தற்காலிகமாகச் சேவைகளை நிறுத்தி இருக்கிறார்கள்.
கனடாவில் சுமார் 49 நகரங்களில் இப்போது இந்த சேவை பாவனைக்கு வந்து விட்டது. சென்ற வருடம் கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, சுவிஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற முன்னேறிய சில நாடுகளில் மட்டுமே இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது பிரான்ஸ், தாய்லாந்து, இந்தியா போன்ற சுமார் 40 நாடுகளில் இந்த 5ஜி சேவை அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் 5ஜியை அறிமுகம் செய்வதில் தற்போது முனைப்புடன் செயற்படுகின்றது. இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டால், ஜியோ நிறுவனத்தின் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையத்தளத்தைப் பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கும். ஜியோ நிறுவனம் இதை அறிமுகம் செய்தால் 5ஜி சேவைகள் அனைத்தும் ஜியோ இன்போகாம் சொந்தமாக உருவாக்கிய தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வெற்றிக்கு இது ஒரு முன் உதாரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தெற்காசியாவில் பரீட்சார்த்தமாக 5ஜியை 2019 ஆண்டு பயன்படுத்திய நாடுகளில் இலங்கையும் அடங்கும். இந்தத் தொலைதொடர்பு தொழில்நுட்பம் ஒரு துவிச்சக்கர வண்டியின் வேகத்தில் இருந்து படிப்படியாக மாறி இப்போது ரொக்கட் வேகத்திற்கு வந்திருக்கின்றது. விரைவாகக் கொள்ளையடிக்க இணையத் திருடர்களுக்கும் இது சாதகமாக மாறலாம். இத்துறையில் அடுத்து நடக்கப்போகும் மாற்றம் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.