7 கோடி பேர் பயணம்.. தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.138 கோடி வருவாய்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக, கடந்த 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், நாளொன்றுக்கு 18, 232 தினசரி பேருந்துகளுடன், 1,514 சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்டன.
இந்த பேருந்துகளின் மூலம், சுமார் 7 கோடி பேர் பயணம் செய்துள்ளதாகவும், இதன்மூலம் தமிழ்நாடு அரசுக்கு 138, 7 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும், 2021 ஆம் ஆண்டு பொங்கலை விட ஒரு கோடியே 7 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.