உண்மை நிலவரத்தை அறிந்திருந்தால் புலிகளிடமிருந்து தப்பித்திருக்க முடியாது! மத்திய வங்கியின் ஆளுநர்…!
விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சில தினங்கள் ஆயுதங்கள் இல்லாத நிலையும் காணப்பட்டிருந்தது. அவற்றை ஊடகங்களுக்கு அன்று சொல்லியிருந்தால், விடுதலைப் புலிகள் அன்றே எமக்கு அடித்திருப்பார்கள்.
ஆகவே எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“எரிபொருளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்திருப்பதற்கு தேவையான இடவசதிகள் இல்லை. அதனால் தொடர்ந்தும் இறக்குமதி செய்தே விநியோகிக்க வேண்டும்.
உணவுப் பொருள் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு என்று எண்ணி குழப்பம் அடையத் தேவையில்லை. அதனை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதனை அவர்கள் வழங்குவார்கள்.
இறக்குமதியாளர்கள் நாட்டு மக்களுக்கு அவசியமான உணவு, மருந்துப் பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கான டொலர் வழங்கப்படும்.
ஆகவே தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.
மத்திய வங்கியில், சிறந்த நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையினைப் பாராட்ட வேண்டும். எமது தேசத்தின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிர்த்தும் பணியினை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்” என்றார்.