கோத்தா அரசு கவிழும்:விமல் வீரவன்ச!
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி. ஆனால், இந்த அரசு வீழ்வது எப்போது என்று இப்போது கூற முடியாது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
“இராஜாங்க அமைச்சர்களையோ அல்லது அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்வதால் அல்லது அமைச்சுக்களின் பொறுப்புக்களை கைமாற்றம் செய்வதால் அரசின் நெருக்கடியைத் தீர்க்க முடியாது.
நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இன்றைய நிலைமையில் மக்களின் மனதை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும் என்பதே பங்காளிகளான எமது நோக்கம். இதற்காகவே நாம் உள்ளுக்குள் இருந்துகொண்டு பாடுபடுகின்றோம். வெளியாட்களுடன் சேர்ந்து அரசை வீழ்த்துவது எமது நோக்கமல்ல.
எனினும், அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி. ஆனால், இந்த அரசு வீழ்வது எப்போது என்று இப்போது கூற முடியாது. அரசின் நகர்வுகளைப் பொறுத்தே அதன் முடிவு தங்கியிருக்கும். ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து – ஆழமாக ஆலோசித்து நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுள்ள சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும்” – என்றார்.