கோவிட் தடுப்பூசி பாஸ் எதிர்ப்பு!! பிரான்சில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் போராட்டம்!!
பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனினால் தடுப்பூசி போடாதவர்கள் குறித்து முன்மொழியப்பட்ட யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.அண்மையில் தடுப்பூசி போடதவர்களை தான் தொந்தரவு செய்யவுள்ளதாகவும், அவர்களை எரிச்சல் ஊட்டவுள்ளதாகவும் அத்துடன் தடுப்பூசி போடாதவர்கள் தேநீர் அருந்தகங்கள் மற்றும் திரைப்பட அரங்கங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை எனவும் மக்ரோன் நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார்.
மக்ரோனின் இத்தகைய நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நேற்று சனிக்கிழமை பிரான்ஸ் முழுவதும் 05,200 க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர் என பிரஞ்சு உள்துறை அமைச்சகம் கூறுகியது.
இச்சனத்திரள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தை விட நான்கு மடக்கு அதிகம் என அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.
கோவிட் ஹெல்த் பாஸை தடுப்பூசி பாஸாக மாற்றும் மசோதா பிரஞ்சு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டால் மது அருந்தகங்கள், நேநீர் அருந்தகங்கள், உணவகங்கள், திரையரங்கங்கள், கலாச்சார இடங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் நீண்ட தூர பொதுப் போக்குவரத்துக்கும் முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களும் நோயிலிருந்து மீண்டவர்களுமே அனுமதிக்கப்படுவார்கள். இனிவரும் காலங்களில் கோவிட் எதிர்மறை சோதனைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தடுப்பூசி போடாதவர்கள் குறித்த இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்படும்.