November 26, 2024

மோடிக்கு கடிதம்:தமிழீழ வரைபாம்!

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து வடக்கு, கிழக்கு தமிழ்க்கட்சிகள் மாத்திரம் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆவணம் அனுப்பப்படுமாக இருந்தால் அது விடுதலைப்புலிகளின் கனவான தமிழீழத்துக்கான வரைபாகவே இருக்கும்“ என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், இந்நாள் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் இன்று ஒப்பமிட்டன.

இதில் மலையக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எவரும் ஒப்பமிடவில்லை.

இது தொடர்பில் இன்றிரவு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,“தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையில் – அதன் தலைவர்களுக்கிடையில் பொதுவான இணக்கப்பாடு இல்லை. ஒற்றுமை இல்லை.

இந்தியப் பிரதமருக்கான பொது ஆவண விவகாரம் இதை வெளிக்காட்டுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தமிழ்பேசும் கட்சிகளோ அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளோ ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்காது.

இலங்கை எனும் எமது நாட்டில் உள்ளகப் பிரச்சினைகளில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை. நாட்டின் அரசுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும்.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது.

ஆனால், தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தை நாடுவது தான் விசித்திரமாகவுள்ளது என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert