திருகோணமலை கோரச் சம்பவம் விபத்தல்ல; கொலை! திடுக்கிடும் தகவல்
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற சம்பவம் விபத்தல்ல அது கொலை என ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு மட்டுமல்ல நாட்டின் சட்டத்துக்கு அமைய இது கொலையே எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே இந்த மரணங்களை நாம் கொலையாகவே கருதுகிறோம், இதனுடன் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் எனவும் அவர் கூறினார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என் கூறிய அவர், இந்த அசம்பாவிதத்தையும் எமது தலையில் சுமத்தவே சிலர் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அந்த பாலத்துக்கு அடிக்கல் நாட்டியது நல்லாட்சியாகும். மதிப்பீடு செய்யாது, கேள்விமனுக் கோரல் விடாது அடிக்கல் நாட்டினர். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மதிப்பீடு செய்து, கேள்வி மனுக் கோரலுக்கு விடப்பட்டு பாலத்தில் ஒரு பகுதியை புனரமைக்கவும் மக்களின் பாவனைக்கு விட வெகு விரைவில் திருத்த நடவடிக்கை எடுத்தோம்.