November 21, 2024

சவேந்திர சில்வா மீது தடை கோரும் பிரிட்டன் எம்.பி சாரா ஜோன்ஸ்

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ், தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‚இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்‘ என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‚மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் வழங்கவேண்டும். நாம் நீதிக்காகப் போராடவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்‘ என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.