November 22, 2024

கொழும்பு கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபம்!

இந்து பௌத்த ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று சொன்னால் முதலில் கொழும்பிலுள்ள கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை உருவாக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஆரியகுளத்துக்கு மத்தியில் பெளத்த இந்து மத நல்லிணக்க மண்டபத்தை  அமைக்க முதல்வர் மறுத்தமையால் நாக விகாரையின் விகாராதிபதி  எதிர்ப்பதாக பத்திரிகைகளில் அறிந்தேன்.

ஒரு தனி நபர் பெருந்தொகை நிதியை செலவழித்து மக்களுக்காக நகரை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காகவே முயற்சிக்கும்போது குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இந்து பௌத்த ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று சொன்னால் முதலில் கொழும்பிலுள்ள கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் ஆரியகுளத்திலும் அதனை உருவாக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

புத்தரும் ஒரு இந்து. எமக்கு பிரிவினைவாதம் தேவையில்லை. ஒற்றுமையாக இருந்து நாட்டை முன் கொண்டு செல்ல வேண்டும்.

கலாசார சீரழிவிற்கு இங்கு மதுபானசாலை உருவாக்கப்படவில்லை. சுற்றுலாத்தலமாகவே இது உருவாக்கப்படுகின்றது. நல்ல நோக்கில் செய்யப்படும் முயற்சியை குழப்புவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.இதனை துரிதமாகச் செய்வதற்கு யாழ் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.