November 22, 2024

கூட்டமைப்பில் ஒருவரே எதிராக உள்ளார்:மீனவர்கள்!

இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். அதை விடுத்து எங்களுடைய தொழிலை நிறுத்துவதால் அரசியல்வாதிகளிற்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றதென வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்தினர் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,நாம் காலங்காலமாக செய்கின்ற தொழில் தொடர்பாக தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள், நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு 5,000 ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாக புரளியை கிளப்பியிருக்கிறார். அது சம்பந்தமாக நாங்கள் குருநகர் தொழிலாளர்களுடன் இணைந்து இன்று பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம்.

ஆறு மாத காலத்துக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரமே இந்த தொழிலை நாங்கள் செய்து வருகின்றோம். ஏம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பொய்யான புரளியை கிளப்பி விட்டது எம்மை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.இதன் மூலம் பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றன.

அரசியலுக்காக செய்யும் பொழுது எங்களை பகடைக்காயாக பயன்படுத்தக்கூடாது. கடற்றொழில் அமைச்சரிடம் நாங்கள் எத்தனையோ முறை அவருடைய வாசஸ்தலத்திற்கு சென்று பிச்சை எடுக்கும் அளவுக்கு சென்றே இந்த தொழிலை செய்ய அனுமதி பெற்றோம். நாரா நிறுவனம் ஆய்வு செய்த பகுதியில் தான் நமது தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்.

6 மாதத்தில் 20 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியாக ஒரு வருடத்தில் பெற்றுக் கொடுக்கின்றோம்.இழுவைமடி தொழிலுக்காக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து விட்டு அந்த சட்டத்தின் மூலம் தடுக்கலாம் என்று நினைக்கின்றார் இறுதிவரை அவருடைய நினைப்பு கனவாகவே போகும்.

கடற்றொழில் அமைச்சரை  இலஞ்சம் வேண்டும் பேர்வழியாக சித்தரித்து காட்டுவது வெட்கக்கேடான செயல்.

இந்த தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் எம்.ஏ.சுமந்திரன், அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.எங்களுடைய தொழிலை நிறுத்துவதால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது.

அவருடைய கடமையை அமைச்சர் செய்தால் அவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. அரசியல் கட்சிகளுக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல.ஒருவர் மாத்திரமே எதிராக செயற்பட்டு வருகின்றார்.

கடல் வளத்தையும் மீன்வளங்களையும் பாதுகாத்தே நாங்கள் இந்த தொழிலை செய்கின்றோம். மீன் இனப்பெருக்க காலப்பகுதிகளில் நாங்கள் இந்த தொழிலை செய்வதில்லை. வருங்கால சந்ததிகளும் இதனை பயன்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்து வருகின்றோம். இவர்களுக்கு மாற்று தொழில் கொடுக்க வேண்டும் என பலரும் கேட்கின்றனர்.நாம் துறைமுகத்தை அமைத்து தருமாறு கேட்டிருந்தோம் ஆனால் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.