திடீரென சிறிலங்கா அரச அதிபரை தேடி வரும் ஆசியாவின் இரண்டாவது கோடீஸ்வரர் !! காரணம் வெளியானது
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கோடீஸ்வரர் கௌதம் அதானி (Gautam Adani) இன்று கொழும்பில் சிறிலங்கா அரச தலைவரை சந்திக்கவுள்ளார் என ஒரு மூத்த அதிகாரி நேற்று இரவு “தி இந்து”விடம் கூறினார்.
தனிப்பட்ட விஜயமாக வரும் அதானி, அரச தலைவரை சந்தித்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய திட்டம் பற்றி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும், அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
‘வெஸ்ட் கன்டெய்னர் இன்டர்நெஷனல் டேர்மினல்’ என்ற பெயரில் புதிய கூட்டு நிறுவனத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி அந்த நிறுவனத்தின் மற்றைய கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
அதனடிப்படையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் 34 வீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் 15 வீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்றது.
அதானி குடும்பம் 2019- ஆண்டைவிட தற்போது 261 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 5.05 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர்களாக உருவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.