சுமந்திரனும் பாழாய் போன விவசாயமும்!
ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடலொன்றை எழுதியுள்ளார் ஊடகவியலாளர் நிக்சன்
கிளிநொச்சி கண்டாவளையில் பெரும்போக விதைப்பில் ஈடுபட்ட நீங்கள்,அரசியலில் குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றிக் கூறும் உங்கள் கருத்துக்கள் பொய்யானவை, அதாவது ஜெனீவா நடைமுறைகள் தெரிந்திருந்தும் இருட்டடிப்புச் செய்து அரசாங்கத்துக்கு ஏற்றாற்போல், நீங்கள் வாதிடுகிறீர்கள் என்பதை உங்கள் நெல்விதைப்பு வீடியோக் காட்சி காண்பிக்கின்றது.
முதலில் நெல்விதைப்புப் பற்றிய விளக்கம் உங்களுக்கு உண்டா?
நெல்விதைப்பு மூன்று வகைப்படும்
ஒன்று- புழுதி விதைப்பு
இரண்டாவது- சேற்று விதைப்பு (பலகையடித்தல்)
முன்றாவது- நாற்று நடுதல்
ஓன்று– மாட்டு உழவில் ஈடுபடும் மாடுகள் சால் கட்டி உழும் (நேராகச் சாலில் செல்லும்) சால் தவறாமல் உழுது மறு உழவு உழுது நிலம் பண்படுத்தப்பட்ட பின்பே நெல் விதைக்கும் முறை புழுதி விதைப்பு எனப்படும். அதாவது மழைகாலம் ஆரம்பிக்கும் முன்.
இரண்டாவது- மழை பெய்யத பின்னர் வயலில் நீர் தேங்கி நிற்பின் சேற்று உழவு செய்து விதைப்பது மற்றுமொரு முறை. (அதாவது சேற்று விதைப்பு எனப்படும்)
மூன்றாவது– மழைகாலம் தொடர்ச்சியாகத் ஆரம்பித்துவிட்டதெனில் நாற்றுநடுவது நாற்று விதைப்பு எனப்படும்.
இந்த முன்று முறைகளையும்விட மரபுரீதியாக, வெறும் தரையாக, அதாவது களைகள் இல்லாத தரையாக அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக புல் வளர்ந்துள்ள தரையில் நெல்லை விதைத்த பின்னர் உழுது மறுத்து உழது விடுவதுமுண்டு.
ஆகவே மேற்கூறிய மூன்று முறைகளும் மற்றும் மரபு விதைப்புக்கும் உட்படாத புதிய விதைப்பொன்றை நீங்கள் விதைக்கிறீர்கள்.
நீங்கள் உழுத மாடுகள் சால் கட்டி உழவில்லை. உங்களுக்கு மேழியைப் பொருத்தமாகப் பிடிக்கவும் தெரியவில்லை. கலப்பையை மாடுகள் வேகமாக இழுத்துச் செல்லும்போது கலப்பை விலகுமானால், கலைப்பையின் கொழு மாட்டின் குதியில் (காலின் அடிப்பாதத்தில்-குழம்பு) படுமானால் மாட்டின் கால் சிதைவடையும் அந்த விளக்கமும் உங்களுக்கு இல்லை.
உழுவதற்கு மாட்டைக் கையில் கொடுத்தவர் பாய்ந்து வந்து பிடித்து அது போற போக்கில் போகட்டும் நீங்கள் வீடியோவுக்கு நின்றால் போதும் என்றார்.
ஆனால் உழவு வேலையே தெரியாத ஒருவருக்கு நன்றாக உழுது பழகிய மாடுகளிடம் கொடுக்கப்பட்டால்கூட, அந்த மாடுகள் சால் வழியே அதாவது நேராகச் சென்று உழும்.
சாதாரணமாக ஒரு பெண்பிள்ளைகூட உழவு பழகிய மாடுகளாயின் மேழியைப் பிடித்தாலே போதும், அம் மாடுகள் சால் வழியே உழும்.
ஆனால் நீங்கள் உழவு செய்யும் அந்த மாடுகள் தறிகெட்டு ஓடி வயலில் உழுது கொண்டிருந்த உங்களையும் இழுத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி ஓடியதைப் காணொளியில் அவதானிக்க முடிந்தது.
உண்மையில் உழவு மாடுகள் சால்கட்டியே உழும். சுற்றிச் சுற்றி ஓடாது.
ஆனால் நீங்கள் உழுத மாடுகள் சுற்றிச் சுற்றி ஓடியதால் அந்த மாடுகள் சாவாரி மாடுகள் என்றே தெரிகிறது.
இதன் பின்பு உங்கள் விதைப்பு நடைபெறுகிறது-
ஆனால் நிலம் பண்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மேற்கூறய மூன்று நெல் விதைப்பு முறைகளும் அல்லது மரபு முறை அதற்குள் அடங்கவுமில்லை.
மாறாக–வயல் நிலம் புல் மண்டிக் கிடக்கிறது. வரம்புகள் கட்டப்படவில்லை. வரம்புகளிலும் வயலிலும் புல் நிறைந்த பகுதிகளில் நீங்கள் நெல்லை எறிகிறீர்கள். (நெல்லை விதைக்கவில்லை)
அவ்வாறு வீசி எறிந்தபோது உங்களுக்குப் பின் நின்று ஒருவர் வழிகாட்டுகிறார். அதாவது நேராகச் சென்ற விதையுங்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் கூறியதையும் நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.
நீங்கள் உழுத மாடுகள் வீடியோ காட்சிகாக ஒழுங்காக உழவில் ஈடுபடாத புஷ்டியான மாடுகளாகத் தெரிகிறன. (புஷ்டியான மாடுகள் உழவில் ஈடுபடுவதுமுண்டு. ஆனால் உங்கள் மாடுகள் அப்படியாகத் தெரியவில்லை)
சுமந்திரன் அவர்களே—
வீடியோ காட்சிக்காக இதனை எடுத்திருந்தாலும் ஒழுங்காக வயல்வேலை தெரிந்தவர்களிடம் கேட்டல்லவா செய்திக்க வேண்டும்.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை எப்படி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா?
போரினால் பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் உரிய உதவிகள் இன்றி தத்தம் நிலங்களில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி விதைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தொழிலை நீங்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள்.
நெல் விவாயசம் என்பது மக்களின் வாழ்வியலோடு பிணைந்தது. அதற்குச் சற்றும் பொருந்தாத முறையில். உங்களது செயற்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு அங்கு விவசாயக் காணி இருப்பது என்பதைக் காண்பிப்பதற்காகவும், நானும் ஒரு மக்கள் தொண்டன் (விவசாயி) என்ற கோணத்திலும் நீங்கள் இவ்வாறு செய்ய முனைந்தாலும், உங்கள் புதிய சாரக் கட்டு (பேச்சு வழங்கில் சாறம்) நீங்கள் அவ்வாறானவர் இல்லை என்பதையே வெளிப்படுத்தியிருந்தது.
நீங்கள் இந்த வீடியோக் காட்சியை எடுக்க முற்பட்டமை மக்களோடு இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டவே என்று நீங்கள் கருதினாலும், மக்களின் இயல்பான இயற்கையோடு இணைந்த வாழ்வியலுக்கு மாறாகவும் யதார்த்தத்திற்கு எதிராகவுமே அது அமைந்துள்ளது என்பதை நீங்கள் அறியாதவரல்ல.
அத்துடன் நெல் விவாசயம் செய்யும் பூமியொன்றில் அதுவும் விவசாயத்தையே நன்கு கற்றுத் தேர்ந்த மக்கள் முன்னிலையிலேயே நீங்கள் விவாசயம் செய்யும் முறையைப் பிழையாகக் காண்பித்திருக்கிறீர்கள்.
அத்தோடு விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டுள்ளேன் எனவும் வாகனம் ஒன்றில் பயணித்தவாறு நேர்கணால் வழங்குகிறீர்கள்.
ஆகவே நெல் விவசாயம் தெரிந்த மக்களையே பகிரங்க வெளியில் முட்டாள்களாக்கிய நீங்கள், அரசியலிலும் இந்த மக்களுக்கு விளக்கமில்லை என்பதை வேண்டுமென்றே பகிரங்கமாகச் சொல்வதுபோல அமைந்துள்ளதல்லவா?
—-உங்களுக்கு ஆதரவு என்று கூறிக் கொண்டு உங்களுக்குப் பின்னால் திரியும் சில தொண்டர்களும், வேறு சில ஊடகவியலாளர்களும் உங்களை வேண்டுமென்றே முட்டாளாக்குகின்றனர் என்பதை நீங்கள் அறியாமல் இருப்பதுதான் வேடிக்கை-