November 22, 2024

றிசாத்தை காப்பாற்றவும் அரசியல் கைதிகளே உதவி!

 

வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், 2 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட் சிஹாப்தீன், 3 ஆம் சந்தேக நபரான ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா ஆகியோரை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று (17) அனுமதித்தது.

முதலாம் சந்தேக நபரான தரகர் பொன்னையா பாண்டாரம் அல்லது சங்கர், நான்காவது சந்தேக நபர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் இஸ்மத் ஆகிய இருவரை ஏற்கனவே கடந்த 6 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதித்திருந்த நிலையிலேயே கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய குறித்த இருவரையும் பிணையில் விடுவித்தார்.

எவ்வாறாயினும் வழக்கின் 5 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையிலேயே இதுவரை இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கினார்.

அதன்படி, விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும், உத்தியோகபூர்வமற்ற சாட்சியாளர்கள் அனைவரதும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரசாயன பகுப்பாய்வு அறிக்கை போன்ற விடயங்களே நிலுவையில் உள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கூறினார்.

அதனால் ஏற்கனவே இவ்விவகாரத்தில் 1,4 ஆம் சந்தேக நபர்களுக்கு பிணையளிக்கப்பட்டுள்ள நிலையில், 2,3 ஆம் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை எனவும் எனினும் 5 ஆவது சந்தேக நபரான ரிஷாத் பதியுதீனுக்கு எதிர்ப்பை முன்வைப்பதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.

ரிஷாத் பதியுதீன் சிறையில் உள்ளபோது தொலைபேசியை பயன்படுத்திய விடயத்தை மேற்கோள்காட்டி, அவர் பயன்படுத்திய தொலைபேசி இன்னும் பகுப்பாய்வு செய்யப்படாத நிலையில், இவ்வழக்குடன் தொடர்புடையோருக்கு அவர் அழைத்ததாக சந்தேகிக்கபப்டுவதால் பிணை வழங்க கூடாது என திலீப பீரிஸ் கோரினார்.

இதனையடுத்து 5 ஆவது சந்தேக நபர் ரிஷாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் வாதங்களை முன்வைத்தார்.

‘கடந்த தவணையில் ரிஷாத் சார்பில் பிணை கோராதபோதும் அவருக்கு இன்று பிணை கோருவதாக அவர் கூறினார். ஷிஷாலினி வேலைக்கு சேர்க்கப்படும்போதும், அவர் இறக்கும்போதும் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் அப்போதும் விளக்கமறியலிலும் சிஐடி. பொறுப்பிலும் இருந்ததாகவும் அதனால் சம்பவத்துடன் அவருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என சட்டத்தரணி என்.எம். சஹீத் சுட்டிக்காட்டினார். ரிஷாத் பதியுதீனின் கால அட்டவணையில் பெரும்பாலான பகுதி இவ்வாறே கழிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைக்குள் துப்பாக்கியை எடுத்துச் சென்று நெற்றிப் பொட்டில் வைத்து அச்சுறுத்துவோரை விட்டுவிட்டு, ஒரு தொலைபேசியை வைத்திருந்தமையை இவ்வழக்குடன் தொடர்புபடுத்தி பிணை மறுக்க சட்ட மா அதிபர் கோருவது வேடிக்கையானது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே விடயங்களையை ஆராய்ந்த நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, 2,3ஆம் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்குவதாக அறிவித்தார். அத்துடன் 5 ஆம் சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடித்தார்.

2,3 ஆம் சந்தேக நபர்கள் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டு கடவுச் சீட்டை மன்றில் ஒப்படைக்க பணிக்கப்பட்டனர். விசாரணையாளர்களுக்கோ, வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டனர்.

அத்துடன் ஹிஷாலினி தங்கியிருந்த அறை, குற்றம் இடம்பெற்ற இடமாக கருதப்படும் நிலையில், அதில் எந்த மாற்றங்களையும் செய்யக் கூடாது என முறைப்பாட்டாளர் தரப்பின் கோரிக்கைக்கு அமைய நீதிவான் மற்றொரு நிபந்தனையும் விதித்தார்.

இதன்போது 2 ஆம் சந்தேக நபரின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ‘மாற்றம் என்பது விசாலமான அர்த்ததை கொடுப்பதால், பொலிஸாருக்கு அந்த அறையை சீல் செய்ய உத்தரவிடுமாரும் அது இரு தரப்புக்கும் பாதுகாப்பானது எனவும் கோரினார்.

அந்த கோரிக்கைக்கு இரு தரப்பும் இணங்கிய நிலையில் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. வழக்கானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.