November 22, 2024

சமலை கொல்ல வந்த குண்டு வேறு ஒரு அமைச்சருடையதாம்!

கொழும்பு நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சரின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இலாச்சியில் இருந்தே அவை எடுக்கப்பட்டுள்ளன.

கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் ​பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திருகோணமலை உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்தவரினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திலே​யே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணப்பணிகளில் பணியாற்றும் மேற்படி சந்தேகநபர், இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திருத்தப் பணிகளுக்காக  வந்துள்ளார்.

அங்குள்ள அறையொன்றின் ​மேசையின் இலாச்சியில் இருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை மீட்டுள்ளார்.

கைக்குண்டை இந்த சந்தேகநபர் வைத்துக்கொண்டதுடன், தோட்டாக்களை அவருடன் இருந்த மற்றுமொருவர் எடுத்துச் சென்றுள்ளார்.

தோட்டாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நபர் வசிப்பதாகக் கூறப்பட்ட மஹவ மற்றும் வெலிக்கந்த பிரதேசங்களுக்கு நேற்று (16) சென்றிருந்த விசேட விசாரணைப் பிரிவினர் அங்கு  சோதனை நடத்தியுள்ளனர்.

கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்ட அந்த வீட்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் தற்போது வசித்துவருகின்றார். எனினும், தற்போதைய அமைச்சர் அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு வருகைதருவதற்கு முன்னரே, கைக்குண்டு மற்றும் ​தோட்டக்களை தான் எடுத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.