விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பு? இலங்கையர்களுக்கு வலை வீச்சு
ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள தலிபான்களுக்கும், அண்மையில் நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலிலும், இலங்கையில் உள்ள இலங்கையர்கள் யாராவது தொடர்புபட்டிருக்கின்றார்களா என்பதை அறிய புலனாய்வுப்பிரிவு விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தலிபான்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்புகள் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்த வகையில், தற்போதும், இலங்கையில் உள்ள இலங்கையர்கள் தலிபான்களுடன் தொடர்பில் இருக்கின்றார்களா என்பது குறித்து ஆராயப்படுகின்றது.
இதேபோல், அண்மையில் நியூசிலாந்தில் நடந்த சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நபருக்கு வேறு ஏதேனும் குழுவுக்கு தொடர்பு உள்ளதா? இலங்கையில் உள்ள எவரேனும் தொடர்புபட்டுள்ளனரா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டுகிறார்.
இந்தப் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சும் இந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்துள்ளது என்றும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.