November 22, 2024

கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலீபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை‌ பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என  தலீபான்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த செய்தியைதனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலீபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர். ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலீபான்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஹிஜாப் மற்றும் புர்கா அணியவிட்டால் தலீபான்கள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் பெண்கள்  கடைகளில் முகத்தை மூடும் துணிகளை வாங்கத் தொடங்கிவிட்டதாக  ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 1990 களில் தலீபான்கள் ஆட்சியில்  நடைபெற்றதை போலவே தற்போதும் நடைபெறலாம் என ஆப்கானிஸ்தான் பெண்கள் அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.