November 22, 2024

அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார் கர்தினால்

 உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் சந்திப்பொன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நிராகரித்துள்ளார்.

இந்த தாக்குதல் பற்றிய விசாரணைகள் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பட்சத்திலேயே சந்திபை மேற்கொள்ள முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்திப்பதற்கான கோரிக்கையை கடந்த வாரம் கடிதம் மூலம் விடுத்திருந்தார்.

எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சந்திப்பிற்கு முன்னதாக சில நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய கத்தோலிக்க நிலையத்தின் தலைவரான அருட்தந்தை சிரில் பெரேரா குறிப்பிட்டார்.