November 22, 2024

இலங்கையை அச்சுறுத்தும் கொவிட் மரணங்கள் – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள சவால்


இலங்கையில் ஒட்சிசன் இன்றி எந்தவொரு கொவிட் தொற்றாளரும் உயிரிழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒட்சிசன் தேவை அதிகரித்துச் செல்லும் நிலையில், தேவையான ஒட்சிசனை பெற்றுக் கொள்வதற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை – ஜெர்மன் கைத்தொழில் மற்றும் வாணிப பிரிவு பிரதிநிதிகளுடன் நேற்று அமைச்சிலிருந்து ZOOM தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு நாடுகளும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், அதற்காக அந்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை தற்போது நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ள நிலையில் அதற்கு தேவையான நிதி வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி வருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்கிணங்க எதிர்காலத்தில் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.