ஆமி ஊசிகளை அள்ளி செல்கிறதாம்!வாயை மூட விசாரணை!
இலங்கையில் இராணுவமயமாக்கலை தெற்கு வேகமாக அனுபவிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளின் பாரிய தொகை, இலங்கை இராணுவத்தின் தடுப்பூசி பரம்பலுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், குற்றஞ்சாட்டியுள்ளது.
வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் தடுப்பூசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது தடுப்பூசி மையங்களில் குழப்பமான சூழ்நிலையைத் தூண்டியுள்ளது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க பொதுக்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கான பொறுப்பை சுகாதார அமைச்சின் தடுப்பூசி வழங்கும் பிரிவு அல்லது தொற்றுநோயியல் பிரிவு ஏற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
„60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முடிக்கும் வரை எங்களால் மரண எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் தொற்றா நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கினால் மரணங்களைத் தடுக்கலாம் என்று சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது“ என்றும் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட தடுப்பூசிகளிற்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் குழப்பங்களை முன்னெடுத்துள்ள போதும் பெருமளவு ஊசிகள் இராணுவத்திற்கு ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இத்தகைய தகவல்களை ஊடகங்களிற்கு வெளியிடுவதை தடுக்க கருத்து தெரிவிப்பவர்களை வேட்டையாட அரசு முற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொய்யான தகவல்களைக் கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தியது தொடர்பான விசாரணைக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜெயருவன் பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) காலை 8:00 மணிக்கு தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகாரசபை மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் குறித்த விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.