November 21, 2024

கோவிட் தொற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் ஆபத்தை எதிர்கொள்ளலும்

உங்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், தடிமன், தலைவலி, உடல்வலி என்பன இருப்பின் கோவிட் நோயாக இருக்க கூடுதலாக வாய்ப்புள்ளது என்பது முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். மழையில் நனைந்த சளிக்காய்ச்சல், ஐஸ்கிறீம் குடித்து வந்த காய்ச்சல், நிறைய வேலை செய்ததால் உடல் அலுப்பில் வந்தகாய்ச்சல் என்று உங்களை நீங்களே ஏமாற்றுவதுடன் தயவுசெய்து எங்களை தொடர்புகொண்டு என்ன மருந்து போடலாம் என கேட்காதீர்கள். நீங்கள் அலட்சியமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களிற்கு ஆபத்தானது என்பதை உணருங்கள்.
நேற்றுக்காலையில் 7 மணிக்கு PHI இடமிருந்து அழைப்பு, வீட்டில் 2 நாட்களாக காய்ச்சலுடன் இருந்த 60 வயதானவர் அதிகாலையில் மூச்செடுக்கச்சிரமப்பட்டு அவசர அம்பூலன்ஸ் ஐ அழைப்பதற்கிடையில் மரணமாகிவிட்டார் என்று. பின்பு, அவரது உடலை பொலுத்தீன் உறையிலிட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த நிலைமை???
கோவிட் தொற்றாளர்களில் அதிகமானவர்களிற்கு “Silent hypoxia” எனும் நிலைமை காணப்படுகின்றது. அதாவது, அவர்களுக்கு மூச்செடுப்பதில் எந்தச்சிரமமும் இருக்காது ஆனால் அவர்களின் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு சாதாரண அளவைவிட குறைவடைந்திருக்கும்.
இன்னும் சிலரில் “Covid speed” (Covid subclinical pneumonia with exertional desaturation) எனும் நிலைமை காணப்படுகின்றது. அதாவது அவர்களது குருதியில் ஒட்சிசனின் அளவு சாதாரண அளவில் இருக்கும் ஆனால் அவர்களது நுரையீரலில் நீர்கோர்த்தல்(pneumonia – நிமோனியா) ஆரம்பித்திருக்கும்.
இந்த இரு நிலைமைகளும் காணப்படுகின்றவர்களில், அவர்கள் சிறிய அளவிலான வேலை ஒன்றை செய்யும்போதே குருதியில் ஒட்சிசனின் அளவு சடுதியாக குறைவடைந்து உடனடியாக மயக்கம் ஏற்பட்டு சில நொடிகளில் மரணம் ஏற்பட வழிவகுக்கின்றது.
ஆனால், இந்த இரு நிலைகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அவர்களிற்கு சிகிச்சையளித்து காப்பாற்றக்கூடிய வாய்ப்புள்ளது.

எனவே நீங்கள் செய்யவேண்டியது என்ன…???
1. ஏதும் கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கோவிட் நோயாக இருக்கலாம் என்பதை முதலில் உணர்ந்து அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குங்கள். கோவிட் யாருக்குமே வரலாம். தீண்டத்தகாத நோயோ அல்லது மறைக்கப்படவேண்டிய நோயோ அல்ல.
2. உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச்சென்று அன்ரிஜென் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
3. அங்கு உங்களிற்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் வைத்தியர்கள் உங்கள் குருதியில் உள்ள ஓட்சிசனின் அளவை அளந்து அதனடிப்படையில் உங்களை வீட்டிற்கு அனுப்பி home based care இல் வைத்திருக்கமுடியுமா அல்லது கோவிட் தடுப்பு நிலையம் (step down hospital) ஒன்றில் வைத்து உங்களை நாளாந்தம் அவதானிக்க வேண்டுமா அல்லது உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கவேண்டுமா என்பதை தீர்மானிப்பார்கள்.
எனவே, தாமதிக்காதீர்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உங்குக்கு நீங்களே வெட்டிக்கொள்ளும் சவக்கிடங்கு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.