திருகோணமலை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!!
திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நகரசபைத் தலைவர் இராஜநாயகம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இதுவரையில் 6 ஆயிரத்து 396 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களும், 164 மரணங்களும் பதிவாகி உள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து பொது மக்களை பாதுகாக்கவும் அவசர தேவைகளைத் தவிர வீட்டை வீட்டு வெளியேறுவதை முடிந்த வரை கட்டுப்படுத்தவும் மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மரக்கறி சந்தை , மீன் சந்தை மற்றும் தனியார் கடைகளை இன்று முதல் ஒரு வாரகாலம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார சட்ட விதிகளுக்கிணங்க திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை , நடைபாதை வியாபாரம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் , பொது மக்களும் வியாபாரிகளும் இவ் வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி கொரோனா தொற்றிலிருந்து எம்மையும் நாட்டையும் பாதுகாப்போம் என நகரசபை தலைவர் நா. இராஜநாயகம் மேலும் தெரிவித்தார்.