யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட்
மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.சமநேரத்தில் Bremerhaven , Dortmund நகரங்களிலும் நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வும் நடைபெற்றது.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி மலர் தூவி சுடர் ஏற்றி வணங்கினர்.
அனைத்து நகரங்களிலும் செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளை நினைவில் நிறுத்தி மாதிரி கல்லறைகள் வைக்கப்பட்டு , ஈன இரக்கமற்ற
சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதையை ஏந்தியவாறு இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய சிறிய பதிவுகள் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது.