வெகு விரைவில் மயானபூமியாகவுள்ள இலங்கை -மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் நடந்ததுபோல ஸ்ரீலங்கா வெகுவிரைவில் மயானம் போன்று காட்சியளிக்கும் அபாய கட்டத்தை நெருங்கி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் 11 மாவட்டங்களில் திரிபுபெற்ற டெல்டா தொற்று பரவியுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருமான மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்படி 11 மாவட்டங்களில் இதுவரை டெல்டா தொற்றுக்கு இலக்கானவர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட டெல்டா திரிபடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் இருந்து டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா, அம்பாறை மற்றும் கண்டி, கொழும்பு, பாணந்துறை, இரத்தினபுரி, ராகம, கடவத்தை, அங்கொடை, கொட்டிகாவத்தை, பியகம, நுகேகொடை, பொரலெஸ்கமுவ, கல்கிசை, மஹரகம, பிலியந்த, பண்டாரகம, காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய பிரதேசங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவில் ஒட்ஸிஸன் தட்டுப்பாடு காரணமாக கொவிட் நோாயாளர்கள் உயிரிழந்தமை மற்றும் மருத்துவமனைகளில் இடப்பாற்றாக்குறை காரணமாக வீதிகளில் நோயாளர்கள் அலைந்து திரிந்தமை மற்றும் மயானங்கள் 24 மணிநேரம் செயற்பட்டமை போன்ற அபாய கட்டம் இலங்கையிலும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில மயானங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இலங்கையிலுள்ள மருத்துவமனைகளின் சூழலில் கொரோனா தொற்றாளர்கள் விழுந்து கிடப்பது மற்றும் மருத்துவமனைகளில் நடைபாதையில் நோயாளர்கள் இருப்பது போன்ற காணொளிகள் வெளியாகியிருப்பதை சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் மறுத்துள்ளார்.