November 23, 2024

பட்டப்பகலில் வெள்ளைவானில் கடத்தப்படும் பொதுமக்கள் – சுமந்திரன் – சரத் வீரசேகர கடும் மோதல்

சிவில் உடையில் பொதுமக்கள் பொலிஸாரினால் பட்டப்பகலில் கடத்தப்படுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுகையில் எதற்கு அமைச்சர் என ஒருவர் இருக்கின்றார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இவ்வாறான கைதுகள் நாட்டில் சட்டமொழுங்கின்மை முற்றாக செயல் இழந்துள்ளதை காண்பிக்கின்றன எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு ஏன் பொலிஸார் வெள்ளை வானில் வருகின்றனர் எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சிவில்உடையில் வந்து கைதுசெய்வது பிழையான முன்னுதாரணம் நாளை குற்றவாளிகளும் அதனை செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் அவர்கள் சிவில் உடையில் வருகின்றனர், ஏன் அவர்கள் வெள்ளை வானில் வருகின்றனர், நீங்கள் வெள்ளை வான் கலாசாரத்தை நாட்டிற்கு நினைவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்களா?,நாங்கள் முன்னர் செய்தோம் அதனை மீண்டும் கொண்டுவந்திருக்கின்றோம் என நாட்டிற்கு தெரிவிக்க முயல்கின்றீர்கள்,நீங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கின்றீர்கள் அதற்காகவே நீங்கள் இதனை செய்கின்றீர்கள் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்களை „முட்டாள்தனம்“ என்று கூறிய பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.