ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்!
ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மொஸ்கோ நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது.
யு.எல் 534 ரக விமானமே இன்று காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 51 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவரும் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவைக்காக 297 ஆசனங்களை கொண்ட ஏ 330 – 300 ரக எயார் பஸ் விமானங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, வாரந்தோறும் இரவு 10.20 மணிக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.