November 22, 2024

ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இடையில் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள்

ஆஸ்திரேலியாவில் மனநலச் சிகிச்சைக்கான தற்போதைய முறை புதிய நோயாளிகளுக்கான தேவையை கையாள முடியாத வகையில் உள்ளதாக மருத்துவர்களும் உளவியலாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

கொரோனா பரவி வரும் இன்றைய சூழலில், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளுதல், அதிகமாக உண்ணுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆஸ்திரேலியர்கள் மருத்துவ ஆலோசனை கேட்பது அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

மனநல நோயாளிகள் அதிகரிக்கும் நிலையில் குறைவான திறன் வாய்ந்த மனநல ஆலோசகர்களே இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போதைய நிலை ஆஸ்திரேலிய சுகாதார அமைப்பை பாதிக்கக்கூடும் என்றும் இதனால் வருங்கால தலைமுறையினரும் பாதிக்கப்படுவார்கள், பொருளாதாரமும் பாதிக்கப்படும் எனப்படுகின்றது.

கொரோனா முன்பிருந்தே ஆஸ்திரேலியாவில் மனநல நெருக்கடி இருந்து வருகின்றது. கடந்த 2019 ம் ஆண்டு கணக்குப்படி 15 முதல் 49 வயதுக்குட்பட்டோர் பலர் தற்கொலையால் இறக்கின்றனர். ஆஸ்திரேலிய National Productivity ஆணையத்தின் அறிக்கைப்படி, 23 லட்சம்  ஆஸ்திரேலியர்கள் லேசான மனநலச் சிக்கல்களையும் 12 லட்சம் பேர் மிதமான மனநலச் சிக்கல்களையும் 8 லட்சம் பேர் மோசமான மனநலச் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்.