November 22, 2024

புனித சந்தியாகப்பர் வரலாறு


புனித சந்தியாகப்பர் வரலாறு
இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். செயின்ட் ஜேம்ஸ் என்பது ஆங்கிலத்தில் சந்தியாகப்பருடைய பெயர். யாகப்பர் என்பது அரபியில் யாகூப் என்று அழைக்கப்படும். இவர் வேதம் போதித்த ஸ்பெயின் தேசம் சென்று மீண்டும் இஸ்ரேல் தேசம் வந்தபோது ஏரோது மன்னனால் தலை வெட்டப்ப்பட்டு வேதசாட்சியாய் மரித்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்பெயின் தேசத்திலிருந்து வந்திருந்த அவருடைய சீடர்கள் அவருடைய கல்லறையைத் தோண்டி அவருடைய எலும்புகளை தங்களுடைய நாட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு உலகப்புகழ் பெற்ற ஒரு ஆலயத்தை அவருடைய கல்லறை மேலேயே கட்டினார். அது சாண்டியாகோ டீ கம்போஸ்டலா என்று அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் மொழியில் செயின்ட் என்பதை சந்த் என்றும் யாக்கோபு என்பதை யாகூ என்றும் அழைத்தனர். அதுவும் பிற்காலத்தில் சந்தியாகூ என்று மாறியது. பிறகு நம் தமிழில் சந்தியாகப்பர் என்று மாறியது.

இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். அவைகள் ரோமில் வத்திக்கானில் தூய பேதுரு ஆலயமும் நம் இந்தியாவில் நம் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள தூய தோமா ஆலயமும் ஸ்பெயின் தேசத்திலுள்ள தூய சந்தியாகப்பர் ஆலயமும் ஆகும். இயேசு நாதருக்கு தன் பன்னிரெண்டு சீடர்களின் மீதும் பாசம் உண்டு என்றாலும் நம் சந்தியாகப்பர் மீது அதிகப் பாசம் கொண்டிருந்தார்.

இயேசுநாதர் இறந்து, உயிர்த்தெழுந்த பின்பு நம் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒன்று கூடி இயேசுவின் நற்செய்தியை உலகம் அனைத்திற்கும் அறிவிக்க யார் யார் எந்தெந்த நாட்டிற்க்குப் போக வேண்டும் என்று தங்களுக்குள்ளே சீட்டுப் போட்டுக் கொண்டார்கள். நம் சந்தியாகப்பருக்கு இஸ்பானியா(ஸ்பெயின் ) தேசம் என்று வந்தது. இது தனக்கு ஆண்டவன் இட்ட கட்டளை என்று உணர்ந்த சந்தியாகப்பர் ஸ்பெயின் தேசம் புறப்பட்டார். தன்னோடு தன்னுடைய எட்டு சீடர்களை தெரிந்து கொண்டு ஸ்பெயின் தேசம் புறப்பட்டுவிட்டார்.

சந்தியாகப்பர் தேவமாதா தனக்கு கட்டளையிட்டபடி ஸ்பெயின் தேசத்தில் மாதாவுக்கு ஒரு சிற்றாலயம் அமைத்து தன் கடமை முடிந்தது என்று மீண்டும் தன் தாய்நாடான இஸ்ரேலில் உள்ள எருசலேம் வந்தார். அப்போது அங்கு வேத கலாபனை ஆரம்பத்திருந்தது. இயேசு நாதரின் மறைவுக்குப்பின் யூத குருமார்களின் செல்வாக்கும் கௌரவமும் மிகவும் குறைந்து போயிற்று. தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டவும் மோயீசனின் திருச்சட்டத்தை நிலை நாட்டவும் மிகவும் கடுமையான சட்டங்களை பிறப்பித்தார்கள். இயேசுநாதரின் பெயரை கூட பொதுவில் உச்சரிக்கக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார்கள்.

அப்போது அந்த நாட்டு அரசனாக இருந்தவன் ஏரோது அக்கரிப்பா. அவன் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள யூத மதத்தலைவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி… என்று தலையாட்டிக் கொண்டிருந்தான். இந்த சூழ்நிலையில் நம் சந்தியாகப்பர் ஜெருசலேம்பட்டணத்தில் சுற்றி அதன் ஆரவாரமிக்க தெருக்களில் வல்லமையாக பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இவரது தைரியமான மற்றும் வல்லமையான பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் மலைத்துப் போயினர். அதே நேரத்தில் ஏரோது தன் படைகளோடு வந்து சந்தியாகப்பரை கைது செய்தான்.

ஜெருசலேம் நீதிமன்றத்தில் விசாரணையின் போது சந்தியாகப்பர் இயேசுநாதரைப் பற்றி கூறிய விளக்கங்களும் ஆதாரங்களும் வல்லமையான பதில்களும் அங்கு கூடியிருந்த யூத மத குருமார்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த விளக்கங்களை கேட்ட நீதிபதி அப்போதே தன் பதவியை ராஜினாமா செய்து இயேசுநாதரை தன் இரட்சகராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனால் மிரண்டுபோன அரசன் ஏரோது அக்கரிப்பா உடனே நம் சந்தியாகப்பருக்கும் அந்த நல்ல நீதிபதிக்கும் சிரச்சேதம் செய்ய கட்டளை இட்டான். அந்த இருவருக்கும் உடனே தலை வெட்டப்பட்டது. இதனால் இயேசுநாதருக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் அப்போஸ்தலர் என்ற பட்டமும் பெற்றார்.

ஸ்பெயின் தேசத்தில் நம் சந்தியாகப்பரால் தோற்றுவிக்கப்பட்ட கிறிஸ்துவம் வேகமாக பரவ ஆரம்பித்தது. பலப்பல கிறிஸ்துவ ராஜ்ஜியங்களும் தோன்றின. துரதிஷ்ட வசமாக அவர்களுக்குள்ளே சமாதானம் இல்லாததால் ஒரு ஒன்றுபட்ட கிறிஸ்துவ ராஜ்ஜியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சந்தியாகப்பரின் சீடர்கள் நம் சந்தியாகப்பருக்கு என்ன நேர்ந்தது என்று அறிய ஆவல் கொண்டு ஸ்பெய்னிலிருந்து இஸ்ரேல் தேசத்திற்கு வந்தனர். அவருக்கு ஏற்பட்ட முடிவைக் கண்டு மிகவும் வருந்தினர்.

சரி… அவரது எலும்புகளையாவது எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் அவரது சமாதி இருந்த இடத்தில் நுற்றுக்கணாக்கான சமாதிகள் இருந்தது கண்டு திகைத்துப் போயினர். சந்தியாகப்பரே எங்களுக்கு காண்பிப்பீராக என்று மனம் உருகி வேண்டினர். அப்போது அந்த அதிசயம் நடந்தது. அவர் வல்லமையான இடியின் மைந்தர் என்று இயேசுவாலேயே கூறப்பட்டவர் அல்லவா… இதோ வானினின்று ஒரு இடி டமார் என்று இறங்கியது. அது சந்தியாகப்பரின் சமாதியை குழிபறித்து அடையாளம் காட்டியது. அங்கும் சோதனை மிஞ்சியது.

அந்தக் குழிக்குள் பல எலும்புக்கூடுகள் இருந்தன. யார் யாரோ எவ்விதமானவர்களோ… என்று கலக்கமுற்ற சந்தியாகப்பரின் சீடர்கள் மீண்டும் வேண்டுதல் வைத்து அவரது எலும்புக்கூட்டை அடையாளம் காட்ட வேண்டினர். அப்போது மீண்டும் அந்த அதிசயம் நடந்தது. மீண்டும் ஒரு இடியை இறக்கினார் சந்தியாகப்பர். அந்த இடியின் வல்லமையால் இரண்டு எலும்புகூடுகள் மின்னின. அவைகள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டன. சந்தியாகப்பரே இதில் உம்முடைய எலும்புக்கூடு எது என்று மீண்டும் வேண்டுதல் வைத்தனர்.

மீண்டும் அதிசயமாக ஒரு எலும்புக்கூடு மின்னியது. மற்றது அணைந்தது. மின்னிய எலும்புக்கூடு சந்தியாகப்பருடையது. சந்தியாகப்பர் தலை வெட்டப்பட்ட அதே இடத்திலேயே அவருக்கென்று ஒரு ஆலயம் எழுப்பி அவரது தலையை மட்டும் அங்கே புதைத்துள்ளனர். இன்றளவும் ஜெருசலேமில் அர்மீனியர்களின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் மிகவும் பிரம்மாண்டமான ஆலயமாக உள்ளது. பிற்பாடு சந்தியாகப்பரின் சீடர்கள் சந்தியாகப்பரின் மற்றைய எலும்புகளை ஸ்பெயின் தேசத்துக்கு கொண்டு போய் புதைத்தனர். நாளடைவில் சந்தியாகப்பரின் சமாதி எங்கு உள்ளது என்று கூட தெரியாமல் போய்விட்டது. இப்படியாக எட்டு நூற்றாண்டுகள் ஓடி மறைந்தன.

கி.பி. 844 இந்த ஆண்டில் ஸ்பெயின் தேசத்தில் வடமேற்கு காட்டுப்பகுதி வழியே தன்னந்தனியே பயணித்தார் ஒரு துறவி. அப்போது அந்த இரவில் ஒரு மண்மேட்டிலிருந்து ஒரு ஒளி வெள்ளம் தோன்றுவதைக் கண்டு அதிசயித்தார். அருகில் சென்று பார்த்தபொழுது விண்ணகத்திலிருந்து ஒரு வினோதமான ஓர் ஒளி வெள்ளம் தோன்றி அந்த மண் மேட்டில் இறங்கியது கண்டு அதிசயித்தார். மேலும் வானோர் பாடலும் மிகத் தெளிவாக கேட்டதால் இந்த இடத்தில் ஏதோ அதிசயம் நடக்கப்போகிறது அல்லது மறைந்துள்ளது என்று கண்டு கொண்டார் . அந்த இடத்தை அடையாளம் வைத்துக்கொண்டு அந்த மண்மேட்டை தோண்டிப்பார்த்த பொழுது அங்கே நம் சந்தியாகப்பரின் எலும்புக்கூடு ஒரு பெட்டியில் ஒளிர்ந்தது. மேலும் அந்த பெட்டியில் இருந்து சில பொருட்களை முன்னிட்டு அவை சந்தியாகப்பரின் எலும்புக்கூடுதான் என்று நிச்சயித்தார்கள்.

அன்றிலிருந்து ஆரம்பமானது நம் சந்தியாகப்பரின் அதிசயங்களும் அற்புதங்களும். இதைப்பற்றி கேள்விப்பட்ட அரசன் 2-ஆம் அல்போன்சா ஓடோடி வந்தான். சந்தியாகப்பரை தெண்டனிட்டு வணங்கினான். நம் சந்தியாகப்பரை ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலர் என்று அறிவித்தான். அவர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் கம்போஸ்த்தலா என்பதாகும். எனவே அதே இடத்தில் அவர் சமாதி மீது ஒரு மிகப்பிரம்மாண்டமான கோவில் ஒன்றை கட்டினான். அவரது காலத்தில் அதற்கு இணையான ஆலயம் உலகில் எங்குமே இல்லை என்னும் அளவிற்கு அது இருந்தது. அந்த கோவிலின் முகப்பும் சரி உள்கட்டமைப்பும் சரி பிரம்மாண்டம் தான் போங்கள். அந்தக் காலத்திலேயே இந்த ஆலயம் இயேசுவின் திருவிழாவுக்கு ஒப்பானது என்று யாத்திரிகர்கள் அறிய வந்தார்கள். இப்போதும் இந்த கோவில் SANTIAGO DE COMPOSTALA (சாண்டியாகோ டீ கம்போஸ்டலா) என்று அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டில் வடக்கிலிருந்து கிழக்கிலிருந்தும் தூய சந்தியாகப்பரை தரிசிக்க மக்கள் வெள்ளம் படையெடுத்து வந்தது. இதனால் வியாபாரம், தங்குமிடம், போக்குவரத்து என பல வழிகளிலும் நாட்டிற்கு வருமானம் பெருகியது. சிறு சிறு குட்டி சமஸ்தானங்கள். குட்டி ராஜாக்கள் தங்களின் நிலைகளை உயர்திக் கொள்ளவும், பாதுகாப்பை முன்னிட்டும் ஒன்று சேர்ந்தனர். இது பல வல்லரசு நாடுகளான சார்சானியர்களுக்கும், துருக்கி முஸ்லீம்களுக்கும் ஆப்ரிக்க இஸ்லாமிய நாட்டினர்களுக்கும் பிடிக்கவில்லை.

எனவே ஸ்பெயின் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது. அப்போது ஸ்பெயின் நாட்டில் அரசராக இருந்தவர் 1-ஆம் ரோமிரோ. இவர் அப்போது அஸ்துரியாஸ் என்னுமிடத்தில் தன் குறைந்த படையினரோடு இந்த மிகப்பெரும் சார்சானிய படைகளுடன் மோதுவதற்கு தயாராக இருந்தார். என்னதான் அவருக்கு கடவுள் நம்பிக்கையும் தன் படை மீது நம்பிக்கையும் இருந்தாலும் ஏனோ மனம் கலக்கமுற்றார். தன் படையினரை க்ளாவிஜோ என்னுமிடத்தில் நிறுத்தினார். அந்த இடத்தில் அன்றைய இரவில் புனித சந்தியாகப்பர் அரசன் ரோமிரோவின் கனவில் தோன்றி ரோமிரோ… நீ மனம் கலங்க வேண்டாம். நாளைய போரில் இந்த சார்சானியர்களை எதிர்த்து உன் சார்பாக நான் போராடுவேன்.

வெற்றி உனதே… நான் ஒரு வெள்ளைக் குதிரையில் வெள்ளை ஆடையில் சிலுவை அடையாளமிட்ட வெள்ளைக் கொடியோடு இந்த பெரிய சார்சானியர் படையோடு போராடுவேன். இதை நீயும் உன் வீரர்களும் மற்றும் சார்சானிய வீரர்களும் காண்பீர்கள் என்று கூறி மறைந்து போனார். அரசன் ரோமிரோ அடைந்த சந்தோஷமும் தைரியமும் சொல்ல வார்த்தை இல்லை. அப்போதே இந்த கனவைப் பற்றி தன் படைத்தளபதிக்கும் வீரர்களுக்கும் அறிவித்து அந்த இரவிலேயே அந்த ஊர் வந்திருந்த ஆயரிடம் சென்று தன் கனவைத் தெரிவித்து வெற்றிக்கான ஆசீரும் அவரிடம் பெற்றான்.

நம் புனித சந்தியாகப்பர் கொடுத்த தைரியத்தினாலும் அவருடைய வாக்குறுதியினாலும் உத்வேகம் பெற்ற அரசனும் படையினரும் போர்க்களத்தில் பயங்கரமாகப் போரிட்டனர். என்ன ஆயிற்று இந்த கிறிஸ்தவர்களுக்கு என்று ஆத்திரப்பட்டான். அந்த முஸ்லீம் படைத்தளபதி. இந்த சின்ன படையை வைத்துக் கொண்டு நம்மை எதிர்க்க இந்த கிறிஸ்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். நம் படைக்கு முன் இந்த கிறிஸ்தவர்களின் படை ஐந்து நிமிடங்களுக்கு கூட தாங்காது. மார்ரே என்று ஆணையிட்டான், பயங்கரப்போர் ஆரம்பமாயிற்று.

முஸ்லீம் படையான சார்சானியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் பலர் தலை இழந்தனர். பல கிறிஸ்த்தவ படையினரும் பல முஸ்லீம் வீரர்களும் புனித சந்தியாகப்பரை வெள்ளைக் குதிரையில் வெள்ளை உடையில் உருவிய கத்தியோடும் வெள்ளை கொடியுடனும் போர்க்களத்தில் சுற்றி சுற்றி வருவதைக் கண்டார்கள். புனித சந்தியாகப்பர் வாழ்க… என்று சந்தியாகப்பருக்கு ஜெயகோஷம் போட்டனர். அவ்வளவுதான் பெரும் படைகொண்ட சார்சானியப் படை பெரும் தோல்வி கண்டது. சந்தியாகப்பரை எதிர்க்க முடியாது. வாருங்கள் ஓடிப்போவோம் என்று குரல் கேட்டது. அவ்வளவுதான் சார்சானியப் பெரும் படை புறமுதுகு காட்டி ஓடியது. அன்றைய போரில் தலை இழந்தும் வெட்டப்பட்டு இறந்தவர்களும் குறைந்தது எழுபது ஆயிரம் பேர். இப்படியாக புனித சந்தியாகப்பர் போராளி அப்போஸ்த்தலர் என்றும் படைமிரட்டி அப்போஸ்த்தலர் என்றும் பேர் பெற்றார்.