November 22, 2024

தமிழர் தாயகப் பதவிகளுக்கு தமிழ் தெரியாத சிங்களவர்! இதுவும் இனஅழிப்புத்தான்! பனங்காட்டான்


கல்ஓயா படுகொலைக்கு அறுபத்தைந்து வயது. 1958 இனப்படுகொலைக்கு அறுபத்திமூன்று வயது. கறுப்பு யூலைக்கு முப்பத்தெட்டு வயது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு முப்பத்திநாலு வயது. முள்ளிவாய்க்கால் உறைநிலைக்கு பன்னிரண்டு வயது. இவை எதற்கும் பொறுப்புக்கூற மறுக்கும் சிங்கள தேசம்,  பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்ற வடக்கு கிழக்குக்கு சிங்களம் மட்டும் தெரிந்த அதிகாரிகளை நியமிப்பதில் தீவிரம் காட்டுகிறது. இதுவும் இனஅழிப்புத்தான்!

சகல இனத்தவருக்கும் மதத்தவருக்கும் வருடாந்தம் சில குறிப்பிட்ட மாதங்கள் அல்லது திகதிகள் பெருநாட்களாக, திருநாட்களாக கொண்டாட்டத்துக்குரியவையாக அமைந்திருக்கும்.

ஈழத்தமிழரைப் பொறுத்தளவில் சில நாட்கள் அவ்வாறு இருப்பினும் பல நாட்கள் இதற்கு எதிர்மாறானவை. கொண்டாட்ட மாதங்களைவிட துயர் பகிர்வு மாதங்களும் நாட்களுமே இவர்களுக்கு நிறைய உண்டு. மே, யூன், யூலை போன்ற மாதங்கள் ஆண்டுகள்கூறி துயர் நினைவு கொண்டவையாக அமைந்துவிட்டன.

ஜெனோசைட் என்று கூறப்படும் இனப்படுகொலை என்பது தமிழர் வரலாற்றில் முக்கியமானதாக ஆகிவிட்டது. 1949ல் டி.எஸ்.சேனநாயக்க அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் கல்ஓயா, கந்தளாய், அல்லை என்கின்ற தமிழ்ப் பிரதேசங்களை சிங்களக் கிராமங்களாக்கியது.

1956 யூன் 5ம் திகதி முதலாவது தமிழினப் படுகொலை கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் கீழான இங்கினியாகலவில் இடம்பெற்றது. இதில் 156 தமிழர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதத்துடன் இது இடம்பெற்று 65 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது.

1958ம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை சர்வதேசத்தின் வரலாற்றுப் பதிவுக்குச் சென்றது. மே மாதம் 24ம் திகதி முதல் 26ம் திகதி வரை வவுனியாவில் தமிழரசுக் கட்சி நடத்திய மாநாட்டை ஒட்டியதாக இந்தப் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அவசரகாலச் சட்டத்தையோ ஊரடங்குச் சட்டத்தையோ பிறப்பிக்க விரும்பாத அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, தமிழர்கள் நன்கு அனுபவித்து பாடம் கற்கட்டும் என்று வாளாவிருந்தார். இது இடம்பெற்று 63 ஆண்டுகள் முடிந்துவிட்டது.

1977, 1979, 1981களிலும் தமிழர் படுகொலை ஆங்காங்கு இடம்பெற்றது. 1977ல் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர் 24 மணிநேரத்தில் கொலையுண்டது பதிவில் உள்ளது. இது ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இதே ஆண்டு யூன் முதலாம் திகதிதான் யாழ்ப்பாணப் பொதுநுர்லகம் அமைச்சர்கள் மேற்பார்வையில் எரித்துச் சாம்பராக்கப்பட்டது.

1983ம் ஆண்டு தமிழினப் படுகொலை முன்னவைகளைவிட மோசமானது. திட்டமிட்டு தேர்தல் இடாப்பைக் கைகளில் ஏந்தியவாறு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தூக்கிக் கொண்டு வீதிகளையும் வீடுகளையும் அடையாளமிட்டு தமிழர் கொல்லப்பட்டனர். பண்டாரநாயக்க பாணியில் ஜெயவர்த்தனவும், ஊரடங்கைப் பிறப்பிக்காது நடப்பவை நன்றாக நடக்கட்டும் என்று பார்த்திருந்தார். நாலாயிரம் வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சொத்தழிப்பு, உடைமை அழிப்பு என்பவை பலகோடி ரூபாக்கள் பெறுமதியானவை.

இது இடம்பெற்று முழுமையாக 38 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் தமிழர் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவென 1987 யூலையில் ஓர் ஒப்பந்தம் செய்தனர். அந்த ஒப்பந்தம் என்னவென்றே தெரியாத வகையில் சீரழிந்த ஒன்றாக மாறிவிட்ட நிலை 34 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது.

மண்ணையும் மக்களையும் காப்பாற்ற, ஆயுதங்களை ஆயுதங்களால் சந்திக்க வைத்த விடுதலைப் போராட்டம், 2009 மே மாதம் உறைநிலை கண்டு பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது.

இவைகள் மட்டுமன்றி தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை, குமுழமுனைப் படுகொலை, மணலாறு-தென்னைமரவாடிப் படுகொலை, கொக்கிளாய்-கொக்குத்தொடுவாய் படுகொலை, வல்வைப் படுகொலை, குமுதினிப் படகு படுகொலை, தம்பலகாமம் படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, மயிலந்தனைப் படுகொலை, நவாலிப் படுகொலை, நாகர்கோவில் படுகொலை, குமரபுரம் படுகொலை, செம்மணிப் படுகொலை, வள்ளிபுனம் செஞ்சோலைப் படுகொலை என்று பெயர் குறிப்பிடும் இருநூறுக்கும் அதிகமான கொத்தணிப் படுகொலைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு பதிவில் உள்ளன. இவற்றுக்கும் அப்பால் ஆங்காங்கு அவ்வப்போது இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பல நூறு.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக படுகொலைகளை சந்தித்து வந்த ஈழத்தமிழினம், இவைக;டாக கற்றுக் கொண்ட பாடங்களையும் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் எந்தளவுக்கு ஆவணப்படுத்தியுள்ளது, எந்தளவுக்கு ஆதாரமாகக் கொண்டு உரிமைப் போராட்டத்தைத் தொடருகிறது என்ற கேள்விக்கு என்ன பதிலுண்டு?

தமிழ் மக்களின் நாடாளுமன்ற அரசியல் தலைமைகளும் மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்குள் நடத்திவரும் ஏட்டிக்குப் போட்டியும் அறிக்கைப் போர்களும், அடுத்த தேர்தலுக்கான முஸ்தீபுகளுமே இன்று முதன்மைபெற்று நிற்கிறது. அயல்நாட்டு அரசியல், வெளிநாட்டு அரசியல், சர்வதேச அரசியல், பூகோள அரசியல் களங்களை தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்தத் தெரியாத கையறு நிலையை, சிங்கள பௌத்த ஆட்சித் தரப்பு சரியாகக் கையாள்கிறது. இதன் முக்கிய அம்சமாக – திசை திருப்புதல் – கச்சிதமாக இடம்பெறுகிறது. இதனால் அரசின் இலக்கு இலகுவாகிறது.

சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பான செய்தியொன்றை கோதபாய ராஜபக்ச ஐந்து சொற்களால் பரவ விட்டார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் கோதபாய போட்டியிடுவார் என்றும், இதனை அவரே ஊடக முதலாளிமார் கூட்டத்தில் தெரிவித்தார் என்றும் இச்செய்தி வெளியானது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது ஒரு தடவை மட்டுமே இப்பதவியில் இருப்பேன் என்றவர், வாக்கை மீறிவிட்டார் என்றனர் எதிரணியினர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தபின்னர் அரசியல் அமைப்பை மாற்றி மூன்றாம் தடவையும் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது மனைவி இதனை விரும்பவில்லை. இதனையும் மீறி அவர் போட்டியிட்டால் கொல்லப்படடுவாரென்ற அச்சம் மனைவிக்கு இருந்தது. யாரால் கொல்லப்படுவார் என்று லலித் அத்துலத்முதலிக்கும், காமினி திசநாயக்கவுக்கும் தெரியும்.

அடுத்து என்ன நடைபெற்றது? இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். ஜே.ஆருக்கு ஆபத்து விளைவிப்பாரென சந்தேகிக்கப்பட்டவரும் அவ்வழியே போனார்.

சந்திரிகா குமாரதுங்கவும் இரண்டு தடவைக்குப் பின்னர் இன்னொரு தடவை அந்த காந்தக் கதிரையில் தொடரவே விரும்பினார். அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், பிரதம நீதியரசராக இருந்த சரத் சில்வாவும் சூழ்ச்சி செய்து செம்மணி புகழ் அம்மணியை வீட்டுக்கு அனுப்பினர்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவிருந்த மகிந்த துணிச்சலாக 13வது திருத்தத்தை நிறைவேற்றி மூன்றாவது தடவையும் போட்டியிட்டு மண் கவ்வினார். அண்ணன் மகிந்தவுக்கு மூன்றாவது தவணை ஆசையை ஊட்டிய பசில் ராஜபக்ச, அடுத்த மாதமே அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார்.

முதல் நாளிரவு மகிந்தவுடன் உணவருந்திய மைத்திரிபால சிறிசேன, அடுத்த நாள் காலை உணவை சந்திரிகாவுடனும் ரணிலுடனும் சேர்ந்திருந்து உண்டுவிட்டு புதிய ஜனாதிபதியானார். பாவம், ஒரு தடவைதான் இப்பதவி கிடைத்தது. உள்வீட்டுக் கலவரம் இவரை செல்லாக்காசாக்கியது.

சந்திரிகா, மகிந்த, சிறிசேன என எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்போது நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவோம் என்று சொல்லியே வாக்குக் கேட்டனர். ஆனால், காந்தக் கதிரையில் ஏறிய பின்னர் பதவி ஆசைக்கு ஏற்றதாக சட்டங்களை மாற்றினார்களே தவிர அரசியல் யாப்பை மாற்றவில்லை.

தேர்தலின்போது ஒரு தடவை மட்டுமே என்று கூறிய கோதபாய இரண்டாம் தடவையும் போட்டியிடுவேன் என்று சொன்னாரா? இவர் தெரிந்தெடுத்த வார்த்தைகள் விளக்கமற்றவை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எஞ்சியிருக்கும் மூன்று வருடங்கள் போதுமா என்று ஊடகர்கள் கேட்டபோது, மேலும் ஐந்து வருடங்கள் உண்டு என்றுதான் இவர் பதில் அமைந்தது. இது குதர்க்கமான பதில். ஏன் அவ்வாறு சொன்னார்?

பசில் ராஜபக்ச மீண்டும் அமைச்சராகி, நியமன எம்.பியானதுடன் ராஜபக்ச குடும்பத்துக்குள் ஊடகங்கள் ஒரு பிரச்சனையை உருவாக்கின. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பசில்தானென்று செய்திகள் வெளிவந்தன. அதற்கு முன்னதாக பசில் பிரதமராவார் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஜபக்ச குடும்பத்துக்குள் சில கசப்புகள் உருவாகின.

இந்த நெருக்கடியிலிருந்து தப்புவதற்காக – மேலும் ஐந்து வருடங்கள் உண்டு – என்ற யுக்தியை கோதபாய திசை திருப்பும் நோக்கத்தோடு பயன்படுத்தினார் என்றும் கருத இடமுண்டு.

இப்படித்தான் திசை திருப்பும் போக்கில் தமிழர் தேச அரசியலும் போகிறது. இந்தியத் தூதுவர், பிரித்தானிய தூதுவர், அமெரிக்கத் தூதுவர் ஆகியோருடன் அடுத்தடுத்த சந்திப்புகள். பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது, தமிழர் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவது என தூதுவர்கள் கூறியதாக கூட்டமைப்பினரே தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் தமிழரின் பூர்வீக நிலத்தை வலியுறுத்தும் அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காவிட்டால் வரிச்சலுகை ரத்தாகுமென்ற ஐரோப்பிய ஒன்றிய எச்சரிக்கை, பிரித்;தானியாவின் கடுப்பான அறிக்கை, இலங்கையில் முதலீடு செய்வது ஆபத்தானது என்றும் உள்நாட்டில் தாக்குதல் இடம்பெறலாமென்றும் அமெரிக்கா விடுக்கும் அறிக்கை என்பவை சீனாவை இலக்கு வைத்து இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறது என்பது கோதபாய தரப்புக்கு நன்றாகத் தெரிகிறது.

இவைகளுக்குப் பின்னால் தமிழர் தரப்பு மறைந்திருக்கலாமென்று தெரிவதால் இவர்களின் கவனத்தைத் திசை திருப்ப தமிழர் பிரதேசங்களுக்கு தமிழ் தெரியாத சிங்கள அதிகாரிகளை நியமிக்க ஆரம்பித்துள்ளது ஆட்சித் தரப்பு. இங்குள்ள பிரதேச செயலாளர், உதவிச் செயலாளராக பணியாற்ற விரும்பும் சிங்கள அதிகாரிகளிடமிருந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு பகிரங்கமாக விண்ணப்பம் கோரியுள்ளது.

பண்டாரநாயக்கவின் தனிச்சிங்களச் சட்டத்தை கோதபாய அமுலாக்க முனைவதையே இது காட்டுகிறது. வடமாகாண பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமித்ததற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்த் தலைவர்களை, முற்றுமுழுதாக இப்பக்கம் திசை திருப்புவதே ஆட்சியினரின் இலக்கு.

ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த நியமனங்களுக்கு பிரதமருக்கு கடிதம் எழுதி காலத்தைக் கடத்தி மக்களைத் திசை திருப்புகிறார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். தனது கதிரையே கேள்விக்குள்ளாகியிருக்கும் மகிந்த கூட்டமைப்பின் தலைவருக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

பதில் எழுதாவிட்டாலும், இதுவும் தொடரும் தமிழின அழிப்புத்தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.