கொவிட் மூன்றாவது ஊசி தேவையில்லை!
மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி இப்போது அவசியம் இல்லையெனத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு தற்போதிருக்கும் கொவிட் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தமது 3 ஆவது டோஸ் கொவிட் தடுப்பூசிக்கு அங்கிகாரம் கோரி விண்ணப்பித்து உள்ளன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்கு 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு போதிய அறிவியல்பூர்வ ஆதாரமும் தரவுகளும் இல்லை. அதற்குப் பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மீதமுள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.
உலகளவில் கொவிட் இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில் டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவின் தலைவர் மைக்கேல் ரியான் கூறுகையில் பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்காமல் 3 ஆவது டோஸாக செலுத்த முடிவு செய்யுமானால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க பணக்கார நாடுகள் மறுப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.