November 21, 2024

தயவுசெய்து தடுப்பூசியை மாற்றி மாற்றி போடாதீங்க… மீறி போட்டால் பேராபத்து வரும் – எச்சரிக்கை விடுத்த WHO அறிவியலாளர்!

முதல் கொரோனா அலையை விட 2ம் கொரோனா அலை மக்களை பயங்கரமாக தாக்கியது. இதற்கு காரணம், உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ்தான். இந்த வைரஸ் தாய் வைரஸை விட 50% வேகமாகப் பரவக் கூடியது. அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இப்போது இருக்கும் தடுப்பூசிக்கு எதிராக செயலாற்றக்கூடிய ஆற்றல் படைத்தது டெல்டா வைரஸ். இந்த வைரஸ் மருத்துவத் துறைக்கு சவாலாக மாறியிருக்கிறது.

தற்போது இதிலிருந்து டெல்டா பிளஸ் என்ற மற்றொரு வைரஸும் தோன்றி இருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த இப்போதுள்ள தடுப்பூசிகளிடம் செயல்திறன் போதுமானதாக இல்லை. அதற்காக காக்டெய்ல் முறை குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

இப்போது வரும் அனைத்து தடுப்பூசிகளிலுமே மொத்தம் இரு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் முறை கோவிஷீல்டு எடுத்துக்கொண்டால் இரண்டாம் முறையும் அதே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், சமீபத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி மாறி, மாறி செலுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதாவது, முதல் டோஸ் கோவிஷீல்டும், இரண்டாவது டோஸ் கோவாக்சினும் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு தடுப்பூசிகள் மாற்றி, மாற்றி போட்டால், உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக நல்ல கிடைக்க வாய்ப்பு உள்ளதாக இந்தக் கலவை தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநரான ரன்தீப் குலேரியா கூறியதாவது –

இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் கொரோனாவுக்கு எதிராக அதிக செயல்திறன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் வேறு வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான முழுமையான தரவுகளோ அறிவியல் ஆதாரங்களோ எதுவும் நம்மிடம் கிடையாது. அதுவரை காத்திருப்பது அவசியம் என்றார்.

இந்தக் கலவை (காக்டெய்ல்) தடுப்பூசி செலுத்தும் முறை செய்திகளில் வெளியானதாலும், அதில் அதிக செயல்திறன் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதால், பொதுமக்கள் வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள விரும்புகின்றனர். அதாவது, முதல் டோஸ் கோவிஷீல்டு போட்டால், இரண்டாவது டோஸ் கோவாக்சின் போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள்.

இது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த அறிவியலாளர் சௌம்யா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது –

மக்களில் சிலர் காக்டெய்ல் தடுப்பூசி முறை குறித்து கேட்கிறார்கள். முதல் டோஸ் அந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டதால், 2வது டோஸ் இதை எடுத்துக்கொள்ள போகிறேன் என்கிறார்கள். இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். நம்மிடம் தரவுகள் இல்லை.

ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அப்படிபட்ட சூழ்நிலையில், இந்த முறையை ஊக்கப்படுத்துவது மிகவும் ஆபத்தில் கொண்டு போய் முடியும். இதுதொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருவேளை இது நன்மை கொடுக்கும் என்றாலும் கூட நாம் அதுவரையில் காத்திருக்க வேண்டும்.

அடுத்தடுத்து என்ன டோஸ்கள் எடுக்க வேண்டும் என மக்களே தீர்மானித்தால் குழப்பமான சூழலுக்கு இட்டுச் செல்லும்

இவ்வாறு அவர் பேசினார்.