November 21, 2024

காலக்கொடுமை:காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சம்பள உயர்வு!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிரிப்பது தொடர்பாக இலங்கை அரசு பரிசீலிக்க உள்ளது.

முன்னதாக காணாமல் போனோர் அலுவலகமே தேவையில்லையென்ற அரசு தற்போது  ரணிலை களமிறக்கியருப்பதுடன் பணியாளர்களிற்கு சம்பள உயர்வு பற்றி பரிசீலிக்க தொடங்கியுள்ளது.

பாராளுமன்ற அமர்வை இவ்வாரம் இன்று (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, பாராளுமன்றம் இன்று (06) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 11.00 மணிமுதல் பி.ப. 4.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிபரிப்பது தொடர்பான பிரேரணையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். அதனை அடுத்து பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நாளை (07) மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான 2 ஒழுங்கு விதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதேவேளை, அன்றைய தினம் பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜூலை 08 ஆம் திகதி மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை தேருநர்களை பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலம், குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனை அடுத்து பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது .

அதேவேளை, ஜூலை 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் நான்கு தினங்களிலும் மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரையான நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளிக்கிழமை (09) தவிர்ந்த ஏனைய மூன்று நாட்களிலும் பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும்கட்சியின் முதற்கோலாசானும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பர்னாந்து, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, எம்.யு.எம். அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கயந்த கருணாதிலக்க, ரிஷாட் பதியுதீன் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.