November 21, 2024

தென்னிலங்கையிலும் பேசு பொருளாக மேதகு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை மையப்படுத்தி மேதகு என்ற திரைப்படம் வெளியான நிலையில், அவர் குறித்த உரையாடல்  கொழும்பிலும் ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் செவ்வியொன்றை கொழும்பின் டெய்லி மிரர் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழர்களின் வெற்றிகரமான இராணுவ தலைவராக கணிக்கப்பட்ட வேலுபிள்ளை பிரபாகரனை மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்காவின் அரச தலைவராக தெரிவானவுடன் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றதாக எரிக் சொல்ஹெய்ம் அந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நோர்வே,  இந்தியாவிற்கும், ஸ்ரீலங்கா விவகாரங்களில் தொடர்புபட்டிருந்த முக்கிய வெளி நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாடாக காணப்பட்டதால் இலங்கை தொடர்பான அனுசரணை பணிகள் அனைத்தும் கொழும்பில் இரகசியமாக இடம்பெற்றதாக எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பில் சமாதான முயற்சிகள் தொடர்பில் என்ன நடைபெறுகின்றது என்பது அப்போதைய  ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கும் மாத்திரம் தெரிந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

2000ஆம் ஆண்டு சந்திரிகா தாக்கப்பட்ட நிலையில், அவர் நோர்வேயின் பங்களிப்பு குறித்து பகிரங்கப்படுத்தியதாகவும், சமாதான உடன்படிக்கையின் முதல் இரண்டு வருடங்கள் வெற்றிகரமானதாக காணப்பட்டதாகவும், எவரும் கொல்லப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்றவேளை விடுதலைப்புலிகள் மிகவும் பலமான நிலையில் இருந்ததாகவும், பலர் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருந்ததன் காரணமாகவே சமாதானப் பேச்சுவார்த்தைக்குள் இழுத்து வரப்பட்டதாகவும் தவறாக கணிப்பிடுவதாகவும் எரிக் சொல்ஹெய்ம குறிப்பிட்டுள்ளார்.

ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் புலிகள் அமைப்பு கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையிலிருந்ததாகவும் அதன்பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மெல்ல வீழ்ச்சி காணத் தொடங்கியதாகவும், இருதரப்பும் ஏனைய தரப்பை இலக்குவைக்க ஆரம்பித்ததாகவும், எனினும் விடுதலைப்புலிகள் அரசாங்கத்தை விட அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் வெற்றிகரமான இராணுவ தலைவர் எனவும், எனினும் அவர் சிறந்த அரசியல் தலைவராக வெற்றிபெறுவதில் தவறியதாகவும் நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பார்வையில் அன்டன் பாலசிங்கம் சமாதான பேச்சுவார்த்தையில் நாயகனாக செயற்பட்டதாகவும், சில நேரங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பாலசிங்கத்தின் கருத்துகளுடன் தனது சொந்த முடிவுகளை எடுத்ததாகவும் செவிசாய்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.