November 24, 2024

கோதா இல்லையென்றால் கோபால்! சுமா என்றால் என்ன சும்மாவா? பனங்காட்டான்


மகிந்த இலங்கையின் 13வது பிரதமர். ரணிலுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆசனத்தின் இலக்கம் 13. இலங்கை அரசியலில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நர்த்தனம் புரிவது 13வது அரசியல் திருத்தம். இதனை மையமாக வைத்து இந்தியா கூட்டமைப்பினருடன் கிளித்தட்டு விளையாடுகிறது. ஆனால், 13வது திருத்தத்தை காணாமலாக்கும் கைங்கரியத்தில் கோதா தரப்பு மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 
பொதுமக்கள் வாழ்வில் ஒவ்வொரு வருடமும் தீபவாளி, பொங்கல், கிறிஸ்மஸ், மீலாத் என்று தவறாது வருவது போன்று ஈழத்தமிழர்களுக்கென்று சில மாதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் உறைநிலைக்குச் சென்ற பின்னர் மூன்று மாதங்கள் கட்டாயமாகியுள்ளன.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையம் வருடாந்தம் கூடும் மூன்று காலங்களே இவை. இந்த வருடத்தின இரண்டாவது அமர்வு ஆரம்பமாகப்போவதை அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட பிரேரணையும், ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றிய தீர்மானமும் தெரியப்படுத்தியது.

இலங்கையின் மனித உரிமைகள் மீறல், போர்க்கால பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை ஆகியவை தொடர்பான காரமான பிரேரணை அமெரிக்க காங்கிரஸில் முன்மொழியப்பட்டது, இது நிறைவேறும் என எதிர்பார்க்க முடியாதிருப்பினும் ஜெனிவா தீர்மானத்துக்கு கொஞ்சம் உப்புச் சேர்க்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் தனது பங்குக்கு காட்டமான தீர்மானமொன்றை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியது. ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசு தொடர்ந்து வைத்திருக்குமானால், நிபந்தனை அடிப்படையில வழங்கப்படும் ஜி.பி.எஸ். பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படுமென்பது இந்தத் தீர்மானம்.

இலங்கை அரசுக்கு இது கேட்டுக் கேட்டு புளிச்சுப்போன ஒன்று. இந்தச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கு தாங்கள் அஞ்சப்போவதில்லையென முக்கிய அமைச்சர்கள் சவால் விட்டனர். அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான ரீதியாக பல கோடி ரூபாவை இலங்கைக்கு மறுகையால் வழங்கியுள்ளது.

அடித்து அடக்கு அல்லது கொடுத்து அணை என்ற பழமொழியில் இது எந்தவகை என்பதை குறிப்பிடத் தேவையில்லை. மறுபுறத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்றி அறிவித்துள்ளார். இது பிள்ளையையும் கிள்ளியவாறு தொட்டிலையும் ஆட்டும் விளையாட்டு.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கினால் ராணுவ ஆட்சியை எவ்வாறு தொடர முடியும் என்ற நியாயமான கேள்வி கோதபாய தரப்பிடம் இருக்கும்வரை எல்லாத் தீர்மானங்களும் வெற்று வேட்டுகளே.

இதற்கிடையில், இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் இரு தரப்பு உறவுகள் பற்றி மெய்நிகர் வழியாக முக்கிய பேச்சுகள் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொறுப்பிலுள்ள கொழும்பு துறைமுக நகரத்தை இந்தியா வான் வழியாக கண்காணிப்பதாக (உளவு பார்ப்பது) தெரிந்து கொண்டும், அதனுடன் உறவுகளை வளர்ப்பது பற்றி இலங்கை பேசுகிறது என்பது அரசியல் நகைப்பு.

இது புறநிலை அரசியல் என்றால், அகநிலை அரசியல் இன்னொரு பக்கத்தால் கரைபுரண்டு ஓடுகிறது. கொரோனாவின் வேகத்துக்கு ஈடாக எரிபொருள் விலையேற்றம் இடம்பெற்றுள்ளது. இதனை வைத்து அதற்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்பன்பிலவை ஒரு கை பார்க்க உள்வீட்டுக்குள் போர் நடைபெறுகிறது.

தாம் செயலாளராகவிருக்கும் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் கொண்டுவந்த விலையுயர்வை, அக்கட்சி சாராத – பங்காளிக் கட்சியைச் சார்ந்த கம்மன்பில மீது குற்றஞ்சாட்டி, பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கியுள்ளார் சாகல காரியவாசம். 2018ல் பொதுஜன பெரமுன புதுக்கட்சியாக உருவான காலத்திலிருந்து அதன் செயலாளராக தொடர்ந்து பதவி வகிக்கும் காரியவாசம், கட்சி அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் பொக்கற் பிராணி என அழைக்கப்படுபவர்.

பசில் அமெரிக்காவில் நிற்கும்போது, திட்டமிட்டு அவரது நெறிப்படுத்தலில் கம்மன்பிலவையும் அவரது சகாக்களையும் பதப்படுத்தவென அம்பு எய்யப்படுவதை அனைவரும் அறிவர். பசிலை நாடாளுமன்றக் கதிரைக்குக் கொண்டு செல்ல எடுக்கப்படும் ஓரங்கம் இது.

என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, ரிறான் அலஸ் ஆகியோர் வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்களை அவர்களாகவே வெளியேற வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அவர்களும் வெளியேற மாட்டார்கள். கிட்டத்தட்ட செல்வம் அடைக்கலநாதனின் ரெலோவும், தர்மலிங்கம் சித்தார்த்தனின் புளொட்டும் கூட்டமைப்பை விமர்சித்து, பயமுறுத்துவது போன்றது எனலாம்.

ஆளுமையில்லாத அனுபவமற்ற இயங்குநிலை குறைவான எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தம்மை வெளிப்படுத்தியுள்ள இக்காலகட்டத்தில், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்துள் கால் வைத்துள்ளார். 1977ம் ஆண்டில் தமது 28வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகி, நான்கு தடவைகள் பிரதமர் பதவிகள் வகித்து, 2020 பொதுத்தேர்தலில் 43 வருட நாடாளுமன்ற வாழ்க்கையிலிருந்து மக்களால் அப்புறப்படுத்தப்பட்ட ரணில், தம்முடன் சேர்ந்து ஐக்கிய தேசிய கட்சியையும் கட்டோடு வீழ்த்தினார்.

பத்து மாத ஆசுவாசமான ஓய்வு நிலைக்குப் பின்னர், ஒரேயொரு தேசியப்பட்டியல் இடத்துக்கு தம்மைத்தாமே நியமித்து இந்த மாதம் 23ம் திகதி மீண்டும் எம்.பி.யாகியுள்ளார். சஜித்தை பிரதான எதிரியாக எண்ணும் ரணில், அவரின் தந்தையான முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த நாளான யூன் 23ல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகியிருப்பது தற்செயலானதா?

சஜித்தைக் கவிழ்க்கப் போகிறார், எதிர்க்கட்சியை உடைக்கப் போகிறார், எதிரணியின் தலைவராகப் போகிறார், அரசாங்கத்துடன் சேர்ந்து பிரதமராகப் போகிறார் என்று ரணில் பற்றிய பல ஆரூடங்கள் இப்போது ஊடகங்களுக்குத் தீனியாகியுள்ளது.

தெரிந்தோ தெரியாமலோ இலங்கை அரசியலில் 13 என்ற இலக்கம் நல்லதுக்கும் கெட்டதுக்கும் முக்கியமாகிவிட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பதின்மூன்றாவது திருத்தத்தை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள ஆசனத்தின் இலக்கம் 13. மகிந்த ராஜபக்ச 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி இலங்கையின் 13வது பிரதமராகப் பதவியேற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவரான முதலாவது தமிழரான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 யூலை 13ம் திகதியன்று கொழும்பில் அகால மரணத்தைத் தழுவினார்.

13ம் திருத்தத்துக்கு பின்னரான முதலாவது பொதுத்தேர்தலில் (1989) போட்டியிட்டுத் தோல்வியடைந்த அமிர்தலிங்கம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி;க்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் இடத்துக்கு தம்மைத்தாமே நியமித்து எம்.பி. ஆனார். அதேபாணியில் ரணிலும் இப்போது தேசியப்பட்டியல் ஊடாக பிரவேசித்திருப்பது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தப் பதின்மூன்று என்பதை வைத்துக் கொண்டே இந்தியத் தரப்பு இலங்கை அரசுடனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் கிளித்தட்டு விளையாட்டு நடத்துகிறது. ஆனால், 13 என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் கூட்டமைப்பினரைச் சந்திக்க கோதபாய தரப்பிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்தானது ஏன் என்று தெரியவில்லை. இந்த ரத்தினால் தாம் மனம் வருந்துவதாக கோதபாய சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு செய்தி.

அதனால் என்ன? கோதபாயவை சந்திக்க கொழும்பு சென்ற கூட்டமைப்பினர் வெறுங்கையோடு திரும்பக் கூடாதென்பதற்காக கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அவர்களை அழைத்து உரையாடியுள்ளார். அதிகாரப் பரவலாக்கலுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்துமென தெரிவித்துள்ளார் தூதுவர். தமிழரின் அபிலாசைகள் நிறைவேற டில்லி நிரந்தரமாக ஆதரவளிக்க உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களும் (மாவை, செல்வம், சித்தார்த்தன்) சம்பந்தனும் ஒரு வரிசையில் அமர்ந்திருக்க, சுமந்திரனும்  இந்தியத் தூதுவரும் அவரது தூதரக அதிகாரிகளும் எதிர்வரிசையில் இருந்துள்ளனர். வழக்கமாக இவ்வாறான ராஜரீக சந்திப்புகளில் இவ்வாறு அமர்வதில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரித் தினசரி இது தொடர்பான ஒரு கேள்வியை தனது பதிப்பில் எழுப்பியுள்ளது – இந்திய அரசின் பிரதிநிதியாக சுமந்திரன் கலந்து கொண்டாரா? கூட்டமைப்பினருடன் ஒரே பக்கமாக அமராது இந்தியத் தரப்புடன் அமர்ந்திருந்தது ஏன்? – இவ்வாறு அச்செய்தி அமைந்துள்ளது.

இது பரமரகசியமாக இருக்கலாம். என்னவோ! கோதா இல்லையென்றால் கோபால். சுமா என்றால் என்ன சும்மாவா?