November 21, 2024

தெற்கில் வெள்ளைவான்:ஆனாலும் சிறைகளில் தடுப்பு!

நேற்று வெள்ளைவானில் கடத்தப்பட்டவரை தாம் கைது செய்ததாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் பொது முகாமையாளர் செய்த முறைப்பாட்டிற்கமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அஸ்டாசெனிகா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு குறித்து விசாரித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பிலியந்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து இரவு நேரத்தில் கைதுசெய்துள்ளனர்.

அலேச சம்பத்தைக் கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன், பிலியந்தலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட அசேல சம்பத் இன்று (26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் தனது தந்தையை பலவந்தமாக இழுத்துச் சென்றதாக அலேச சம்பத்தின் மகள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருந்தார்.

தாம் சீ.ஐ.டி. எனக் கூறிக்கொண்டவர்கள் தமது அடையாள அட்டையைக்கூட காண்பிக்கவில்லை என்றும், இவர்கள் சிவில் உடையில் வந்திருந்ததாகவும் அலேச சம்பத்தின் மகள் தெரிவித்திருந்தார்.

வருகிறேன் என்று கூறியபோதும், வந்திருந்தவர்கள் அசேல சம்பத்தின் கழுத்தால் பிடித்து, தரையில் அமர்த்தி பலவந்தப்படுத்தியதாக அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்தனர்.